Thursday, September 11, 2014

பாரதி போற்றுவோம்

தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
என்னென்று சொல்வேன்.
                     பாரதிதாசன்

     ஆண்டு 1921. சென்னை திருவல்லிக்கேணி. பார்த்தசாரதி கோயில். கடந்த இரண்டு நாட்களாகவே, அக்கோயில் யானையின் குணம் மாறியிருந்தது. அமைதியின்றித் தவித்துக் கொண்டேயிருந்தது. யானையின் பாகன் கூட அருகில் செல்ல அச்சப்ட்டார்.

      கருப்பு கோட், இடையிலோ வெள்ளை வேட்டி, தலையிலோ முண்டாசு அணிந்த அவர், நெஞ்சம் நிமிர்த்தி, கம்பீரமாக, கையில் தேங்காய்ப் பழத்துடன் யானையினை நெருங்கினார். இக்கோயிலுக்கு வரும் பொழுதெல்லாம், யானைக்குத் தேங்காய் பழம் கொடுத்து மகிழ்ச்சி கண்டவர் இவர். இதோ இன்றும் தேங்காய் பழத்துடன் யானையை நெருங்குகிறார்.

     அந்த யானைக்கு மதம் பிடித்துள்ளது. அருகில் செல்ல வேண்டாம். அன்பர்கள் பலர் தடுத்தனர்.

     யானையும், யானும் நண்பர்கள். சக்தியின் வடிவாகவே யானையினைக் காண்பவன் நான். யானை எம்மை ஒன்றும் செய்யாது.

     யானையை நெருங்கினார்.

      கண்ணிமைக்கும் நேரத்தில், மதம் பிடித்த அந்த யானை, அம் மகா கவியை, தும்பிக்கையால் தூக்கி வீசியது. மேல்நோக்கி வீசப்பட்டவர், மீண்டும் யானையில் காலடியிலேயே விழுந்து மூர்ச்சையானார்.

காலா நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன்
காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்
என யமனுக்கே சவால் விட்டவர், யானையின் காலடியில்.

     மதம் பிடித்த யானையின் அருகில் சென்று, அம் மாமனிதரைத் தூக்கக் கூட அஞ்சி, அனைவரும் விலகி நின்றே வேடிக்கைப் பார்த்தனர்.

     செய்தியறிந்த குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார். துணிந்து யானையின் அருகில் சென்று, காலருகே சுருண்டு கிடந்த, அம் மாமனிதரைத் தூக்கி வந்து மருத்துவ மனையில் சேர்த்தார்.

     இரண்டொரு நாளில் எழுந்து நடமாடினாலும், உடல் நிலை என்னவோ, நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே சென்றது.

     நண்பர்களே, இம்மாமனிதர்தான் மகாகவி பாரதி என்பதைத் தாங்கள் நன்கறிவீர்கள்.

         இளமையிலேயே, தனது பதினோராம் வயதிலேயே, ஈழக் கவி ஒருவரால் பாரதி என பட்டம் வழங்கிப் பாராட்டப் பெற்றவர் இவர்.

     இத்துனை சிறு வயதிலேயே பாரதி பட்டமா? குமுறினான், பொறாமையின் உச்சிக்கே சென்றான் ஒருவன். அவன் பெயர் காந்திமதி நாதன்.

     தம்பி, உன்னால், பாரதி சின்னப் பயல் என்று முடியுமாறு ஒரு கவி இயற்ற முடியுமா? அறைகூவல் விடுத்தான்.

காரது போல் நெஞ்சிருண்ட
காந்தி மதி நாதனைப்
பார் அதி சின்னப்பயல்

பாடினார் பாரதி. பாரதியைச் சின்னப் பயலாக நினைத்தவன், அதி சின்னப் பிள்ளையானான். வெட்கித் தலை குனிந்தான்.

       பாரதி, பாட்டுக் கொரு தலைவர் அல்லவா.
    

ஆங்கிலேய அரசு பிறப்பித்த ரௌலட் சட்டத்தை எதிர்த்து, ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய மகாத்மா காந்தி, அவ்வியக்கத்திற்கு ஆதரவு திரட்ட 1919 இல் சென்னைக்கு வந்தார். மூதறிஞர் இராஜாஜியின் வீட்டில் தங்கினார்.

     நாளேடுகளின் வழி, இச்செய்தியினை அறிந்த பாரதி, நேரே இராஜாஜியின் இல்லம் சென்று, காந்தியைச் சந்தித்தார்.

     எடுத்த எடுப்பிலேயே தன்னை, அறிமுகப் படுத்திக் கொண்டார்.

      நான் பாரதி. இன்று  கடற்கரையில், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். தாங்கள் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க வரமுடியுமா?

     காந்தி சிறிது யோசித்தார். பிறகு சொன்னார்.

      நீங்கள் நடத்தப் போகும் கூட்டத்தை, ஒரு நாள் தள்ளி வைத்துக் கொள்ளலாமே?

     எதற்காக ஒரு நாள் தள்ளி வைக்கச் சொல்லுகிறீர்?. விடவில்லை பாரதி.

     இன்று நான் வேறொரு கூட்டத்திற்குத் தலைமை ஏற்க வேண்டும். அதற்காகத்தான்.

     அப்படியென்றால் நீங்கள் அந்தக் கூட்டத்திற்குப் போங்கள். நான் எனது கூட்டத்திற்குப் போகிறேன். ஆனாலும், மிஸ்டர் காந்தி, நீங்கள் தொடங்கவிருக்கும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு, என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     பதிலுக்குக் கூட காத்திராமல், அடுத்த நொடி, கம்பீரமாய் எழுந்து வெளியே சென்று விட்டார் பாரதி.

    ஏதோ ஒரு புயலே அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.

    பாரதி, அன்று, தான் நடத்திய கூட்டத்தில்தான், இப்பாடலைப் பாடினார்.

வாழ்கநீ எம்மான், இந்த
   வையத்து நாட்டி லெல்லாந்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி,
    விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
     பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
    மகாத்மாநீ வாழ்க வாழ்க.

    


இந்திய நாடு உண்மையான சுதந்திரம் பெற வேண்டுமானால், ஆண்களுக்கு இணையான மரியாதையினையும், உரிமையினையும் பெண்களும் பெற வேண்டும் என்று அன்றே வாதிட்டவர் பாரதி.

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்

என்று கொதித்து எழுந்தவர் பாரதி.

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போமென்ற
    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்

என எள்ளி நகையாடியதும் பாரதிதான்.

பட்டங்கள் ஆள்வதும்
    சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
    நடத்த வந்தோம்

என்று முழங்கியதும் பாரதிதான். இது மட்டுமா,

அச்சமில்லை யச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து
    வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை யச்சமில்லை
    அச்சமென்ப தில்லையே

என்றும் வீறு கொண்டு முழங்கிய பாரதியின் உடல் நிலை, யானை தூக்கி வீசிய அன்றிலிருந்தே, மோசாமாகிக் கொண்டேதான் வந்தது. வயிற்றுக் கடுப்பு நோய் வேறு, தன் பங்கிற்குத் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது.

     மருத்துவர்கள் மருந்துகள் பல, கொடுத்தும், உண்ண மறுத்தே வந்தார்.

     மருந்துகள் உண்ண மறுப்பதைக் கண்டு வருந்திய, பாரதியின் மனைவியார், தன் மகள் சகுந்தலாவின் கையினால், மருந்து கொடுக்கச் சென்னார்.

     சகுந்தலா கொடுத்த மருந்தை, மறுக்காது குடித்த பாரதி, சகுந்தலா, என் அருமை மகளே, நீ மருந்தாக எனக்குக் கொடுத்தது, மருந்தில்லேம்மா, பார்லி கஞ்சி என்று கூறி, ஒரு கணம் கண் மூடியவர், அடுத்த நிமிடம், அருகிலிருந்த நண்பர்களைப் பார்த்துக் கூறினார்.

     அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி, ஆபீசுக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும்.

     மகாகவி பாரதி கடைசியாகப் பேசிய வார்த்தைகள் இவைதாம். பின் பேசவேயில்லை. கண் திறக்கவும் இல்லை.

1921, செப்டம்பர் 11
மகாகவி பாரதி
இவ்வுலக வாழ்வு துறந்த நாள்.

நண்பர்களே, அந்நாள் இந்நாள்தான்.
செப்டம்பர் 11
பாரதியின் நினைவு நாள்.

     நண்பர்களே, சொல்வதற்கே, கூச்சமாக, அவமானமாக, வேதனையாக இருக்கிறது, தனது இறவாக் கவிதைகள் மூலம், சுதந்திர உணர்வினை ஊட்டி, மக்களின் நாடி, நரம்புகளை எல்லாம், முறுக்கேறச் செய்தானே, முண்டாசு முனிவன் பாரதி,

காக்கை குருவியெங்கள் சாதி நீள்
   கடலு மலையு மெங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை
   நோக்க நோக்க களியாட்டம்,

என்று காக்கைக் குருவிகளைக் கூட, தன் சாதியாகப் பாடினானே பாரதி, அம் மகாகவி பாரதி இறந்த பின், அவர் உடலில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையைவிட, இறுதி ஊர்வலத்தில், கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

     நண்பர்களே, பாரதியின் இறுதி ஊர்வலத்தில் இருபது பேர் கூட கலந்து கொள்ளவில்லை, என்பதுதான், வரலாறு சுட்டும் கசப்பான உண்மை.

நண்பர்களே,
மகாகவி பாரதியின் நினைவு நாளாம்
இந்நாளில்,
பாரதியை, அம் மகா கவியை
நாமாவது
போற்றுவோமா

பாரதி புகழ்

வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோமா.