Saturday, September 6, 2014

நிலமுள்ளளவும் நீருள்ளளவும்
கலை உள்ளளவும் நிறை பெற்றோங்கும்
இறை உறை கோயிலை எழுப்பிய மன்னன்
நிறைபுகழ் ஓங்க வாழ்த்துவம் இனிதே
-          பாவலர் பாலசுந்தரம்

     நண்பர்களே, நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கடந்த பதிமூன்று வருடங்களாக, தினமும் பள்ளிக்குச் செல்லும் பொழுது, தஞ்சைப் பெரியக் கோயில் வழியாகத்தான் செல்கிறேன், வருகிறேன்.

     தினமும் பெரியக் கோயிலைக் காணும் பொழுதெல்லாம் மனதில் மகிழ்ச்சி தோன்றும். காரணம் கல்கி. நமக்குப் பொன்னியின் செல்வனை அறிமுகப்படுத்தியவரல்லவா. பொன்னியின் செல்வனைப் பல முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும், மேலும் மேலும், உள்ளத்தில் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டேயிருக்கும் அட்சய பாத்திரம்தான் பொன்னியின் செல்வன்.

     நண்பர்களே, பெரியக் கோயில் வளாகத்தில், காற்று வாங்கிக் கொண்டே நடக்கும் பொழுது, ராஜராஜனும் உடன் வருவதைப் போன்ற ஓர் உணர்வு நமக்கு ஏற்படும். நிச்சயம் நீங்களும் இந்த உணர்வினை அனுபவித்திருப்பீர்கள். இதுவரைத் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வந்ததில்லையாயின், கட்டாயம் ஒரு முறை வாருங்கள், தங்களை வரவேற்றுப் பெரியக் கோயிலுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறேன்.

     கடந்த பல ஆண்டுகளாகவே, உள்ளத்தில் ஓர் ஆசை. இராஜராஜ சோழன் மீளாத் துயில் கொள்ளும், புனித இடத்தினை ஒரு முறையேனும் காண வேண்டும் என்ற ஓர் ஆசை. இவ்வளவிற்கும் அவ்விடம், எனது வீட்டிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவுதான்.

     நண்பர்களே, கடந்த 14.12.2013 சனிக் கிழமை இரவு, முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் அலைபேசியில் அழைத்தார். இவரை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
சோழ நாட்டில் பௌத்தம்
http://drbjambulingam.blogspot.in
முனைவர் ஜம்புலிங்கம் பக்கங்கள்
http://ponnibuddha.blogspot.in
என இரு வலைப் பூக்களை நடத்தி வருபவர். களப்பணி நாயகர். சோழ நாடெங்கிலும், பௌத்தத்தின் அடிச்சுவட்டைத் தேடி அலைந்து, இதுவரை உலகு அறிந்திராத புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்து, உலகிற்கு அறிவித்து வருபவர்.

     கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் உயரிய நட்பினைப் பெற்றவன் நான். எனக்கு வலைப் பூவினை அறிமுகம் செய்தவரே இவர்தான். எனது வலை உலக குருநாதர் இவர்.

     நாளை காலை உடையாளூருக்குச் சென்று வருவோமா? என்றார்.

     இதைவிட வேறு என்ன வேலை எனக்கு இருக்கப் போகிறது.

     வருகிறேன் என்றேன்.

     நண்பர்களே, 15.12.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 7.30 மணியளவில், இரு சக்கர வாகனத்தில் இருவரும் புறப்பட்டோம்.

     சோழ தேசத்தின் மேன்மையினையும், தமிழரின் நாகரிகத்தினையும் உலகிற்கு உணர்த்தியவர் இராஜராஜன். தஞ்சைப் பெரிய கோயிலை வானுயரக் கட்டி எழுப்பி, சிவபாத சேகரனாய் உயர்ந்தவர் இராஜராஜ சோழன்.

நாம் எடுப்பிச்ச திருக் கற்றளி
ஸ்ரீ இராஜ ராஜீசுரமுடையார்க்கு
நாங் குடத்தநவும் அக்கன்
குடுத்தநவும் நம் பெண்டுகள்
குடுத்தநவும் கொடுப்பார்
கொடத்தநவும்
என்று பெரியக் கோயில் கல்வெட்டுகளில் செதுக்க உத்தரவிட்டதோடு, கோயிலின் பராமரிப்பிற்காக, யார் யார் என்னென்ன கொடுக்கிறார்களோ, அத்தனை பேர்களுடைய பெயரும் இங்கே வரவேண்டும். ஒருவர் மீதமில்லாது, ஒருவரையும் புறக்கணிக்காது, அவர் எவராக இருப்பினும், அவர் கொடுத்த கொடை எவ்வளவு சிறியதாக இருப்பினும், அதுவும் கல்லிலே பொறிக்கப்படவேண்டும் என்றும் ஆணையிட்டுச் செயல்படுத்தியவர் இராஜராஜன்.

     தஞ்சைப் பெரியக் கோயிலின் திருப்பணி நிறைவுற்றவுடன், தனது அருமைப் புதல்வன் இராஜேந்திரனை அரசனாய், அரியணையில் அமரச் செய்துவிட்டு, அமைதியாய், குடந்தையின் அருகே உள்ள உடையாளூரில், ஓய்வெடுத்து, இறைவனோடு ஒன்றெனக் கலந்தவர் இராஜராஜன்.

     உடையாளூரில் நுழைந்தோம். சிறு கிராமம் ஒரு குறுகிய சந்தின் முனையில், ஓர் அறிவிப்புப் பலகை. அச்சந்தில் திரும்பினோம்.

     நண்பர்களே, ஆறு அடி அகலம் கூட இல்லாத குறுகிய சந்து அது. மண் தரை. சந்தின் இரு புறமும், மூங்கில் மர முட்களைக் கொண்ட முள் வேலிகள்.

சிறிது தூரம் சென்றதும், இடது புறம் ஒரு சிறிய குடில், கீற்று வேய்ந்த சிறு குடிசை. குடிசையின் பின்புறம், சாய்ந்த நிலையில், மண்ணோடு மண்ணாக ஒரு லிங்கம். மேற்புறம் ஒரு சிறிய கீற்று வேய்ந்த, பழுதடைந்த சிறு பந்தல்.

     நண்பர்களே, இதுதான், இதுதான் நண்பர்களே, தரணியாண்ட மாமன்னன் இராஜராஜ சோழனின் சமாதி. மனம் கூனிக் குறுகித்தான் போனது. உலக வரலாற்றில், தமிழனுக்கு ஓர் உயரிய இடத்தைப் பெற்றுத் தந்த மாமன்னன் இராஜராஜனின் அஸ்திக் கலசம் துயில் கொள்ளும் இடம் இப்படியா இருக்க வேண்டும். இப்படியா பராமரிக்கப்பட வேண்டும். வாழைத் தோப்பிற்கு இடையில், வெட்ட வெளியில் அல்லவா இராஜராஜன் உறங்குகிறார்.

     பக்கிரிசாமி என்பவர் இவ்விடத்தைப் பராமரித்து வருகிறார். கடந்த பத்தாண்டுகளுக்கும்மேல், இராஜராஜன் மீளாத் துயில் கொள்ளும், இச்சமாதியினைப் பராமரித்து வருகிறேன். வருமானத்திற்கு வழியில்லை. இராஜராஜனின் சமாதியினைப் பார்க்க வருகிறவர்கள் வழங்கும், சிறு சிறு தொகைகளைக் கொண்டு, சூடம் ஏற்றி வழிபாடு செய்து வருகிறேன் என்றார்.

     மாமன்னா, இராஜராஜா, நீ எழுப்பியக் கற்றளிக்குக் காணிக்கையாய், ஒரு சிறிய ஆட்டுக் குட்டியை அன்பளிப்பாய் வழங்கியவரின் பெயரைக் கூட, கல்வெட்டில் பொறித்து மகிழ்ந்தவன் நீ. ஆனால் உனது தற்போதைய இருப்பிடமோ வெட்ட வெளி. உனக்கொரு கட்டிடம் கட்டவோ, மணி மண்டபம் எழுப்பவோ, யாருமில்லையே இராஜராஜா. என்ன உலகு இது.

     நண்பர்களே, இராஜராஜனின் சமாதி குறித்த இருவேறு கருத்துக்கள் தமிழறிஞர்களிடையே நிலவி வருகிறது. இதுதான் இராஜராஜனின் அஸ்திக் கலசத்தைத் தாங்கிய சமாதி என்று கூறுவாரும் உள்ளனர், மறுப்பாரும் உள்ளனர். ஆனால் இராஜராஜன் தன் இறுதி நாட்களைச் செலவிட்ட இடம் உடையாளூர்தான் என்பதில் யாருக்கும் ஐயமுமில்லை, இருவேறு கருத்துமில்லை.

      எனவே இவ்வூரில், இவ்விடத்தில் இராஜராஜனுக்கு மணி மண்டபம் எழுப்பப் பெற வேண்டும் என்பதை அனைவரின் விருப்பமாகும்.
     

உடையாளூரில் இருந்து புறப்பட்டு, பழையாறை சென்றோம். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகராய் விளங்கிய இடம் பழையாறை.

தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை
என்று பாடுவார் சேக்கிழார்.

     அரசலாற்றுக்குத் தென் கரையில் நின்று, அந்த நகரைப் பார்ப்போம். அட்டா வெறும் நகரமா இது? தமிழ்த் தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா விளங்குகிறது.

     விண் முட்டும் மணி மாட மாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளி வீசுகின்றன.

     பழையாறையின் நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த் தளி, மேற்றளி, தென்தளி என்னும் நான்கு சிவனார் கோயில்கள் இருக்கின்றன. போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படை வீடு, புதுப் படை வீடு, மணப் படை வீடு, பம்மைப் படை வீடு ஆகிய நான்கு வீர புரிகள் காணப்படுகின்றன.

    இவ்வளவுக்கும் நடுநாயகமாகச் சோழ மாளிகை என்றால், ஒரே மாளிகையா? விஜயாலய சோழருக்கு முன்னால் இது ஒரு தனி மாளிகையாக இருந்தது. பிறகு ஒவ்வொரு அரச குமாரனுக்கும், ஒவ்வொரு மகாராணிக்கும், ஒவ்வொரு இளவரசிக்குமாகப், பழைய சோழ மாளிகையையொட்டிப் புதிய புதிய மாளிகைகள் எழுந்து நிற்கும் காட்சியைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். வர்ணிப்பதற்கோ பதினாயிரம் கவிஞர்களின் கற்பனா சக்தி போதாது.

     நண்பர்களே, பறையாறை பற்றிய, கல்கியின் வர்ணனைகள்தான் மேலே நீங்கள் கண்டது. ஆனால் நண்பர்களே, பழையாறையில் இன்று எஞ்சி நிற்பது சோமநாத சுவாமி திருக்கோயில் ஒன்று மட்டும்தான்.

     மற்ற மாட மாளிகைகளும், கோபுரங்களும் காற்றில் கரைந்து விட்டன. சோழர் காலத்திற்குப் பிறகு நடைபெற்ற, படையெடுப்புகளில், மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டன.

     பழையாரைக் கோயிலின் நுழைவு வாயிலின் கோபுரமே, இக்கோயிலின் பழமையினை மட்டுமல்ல, நமது அலட்சியத்தையும், அறியாமையினையும் பறைசாற்றுகிறது. முகப்பு கோபுரத்தின் உச்சியில், பெருந் தோட்டமே உருவாகியுள்ளது. உச்சி முழுவதும் செடிகள், கொடிகள்.

     நண்பர்களே, கோயிலின் உள்ளே நுழைந்தோம். மண் மேடுகளே எங்களை வரவேற்றன.

     கண்ணைக் கவரும் சிற்பங்கள் இருந்தும், குப்பை மேடாய் காட்சி தருகிறது கோயில். கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தோம். வருத்தம் மட்டுமே மிஞ்சியது.

     பழையாறையில் இருந்து புறப்பட்டு பட்டீசுவரம் வந்தோம். பட்டீசுவரத்தில் இருந்து, சுந்தர பெருமாள் கோயில் செல்லும் வழியில் இருக்கிறது பஞ்சவன் மாதேவீஸ்வரம்.

     நண்பர்களே, இராஜராஜ சோழனின் மனைவியர்களில் ஒருவர்தான் பஞ்சவன் மாதேவி. இராஜராஜ சோழனுக்குப் பிறகு, மண்ணுலக வாழ்வு துறந்து, விண்ணுலகில் இராஜராஜனுடன் மீண்டும் இணைந்தவர்.

     வாழைத் தோப்புகளுக்கு இடையில் இக்கோயில் அமைந்துள்ளது. நாங்கள் சென்றபொழுது கோயில் பூட்டியிருந்தது. அருகில் விசாரித்தோம். ஒரு வீட்டை கை காட்டினர். கோபாலன் என்பவர்தான் இக்கோயிலைப் பராமரித்து வருகிறார். எங்களைக் கண்டவுடன், சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.  நான் இக் கோயிலைக் கடந்த முப்பது வருடங்களாகப் பராமரித்து வருகிறேன். வருமானம் எதுவும் கிடையாது. தினமும் கோயில் முழுவதும் கூட்டி, சுத்தம் செய்து, தீபமேற்றி வருகிறேன் என்று கூறியவாறு, கோயிலைத் திறந்து விட்டார். உள்ளே நுழைந்தோம்.

     நண்பர்களே, இராஜராஜ சோழனுக்கோ, இராஜராஜனின் பட்ட மகிஷிக்கோ, இராஜேந்திரச் சோழனைப் பெற்றெடுத்த வானதிக்கோ பள்ளிப் படை கோயில்கள் இல்லை. ஆனால் பஞ்சவன் மாதேவியின் பள்ளிப் படை கோயில் இது. அதுவும், ராஜராஜ சோழனின் மகன், இராஜேந்திரச் சோழனால் கட்டப் பெற்ற பள்ளிப்படை கோயில் இது.

     இராஜேந்திர சோழன், தன் தந்தையினுடைய அனுக்கிக்கு கோயில் எழுப்பியிருக்கிற செயலை எண்ணும் பொழுது, பஞ்சவன் மாதேவி அற்புதமானப் பெண்மணியாய் இருந்திருக்க வேண்டும் என்பது புரிகிறது.


நண்பர்களே,  கோயிலைச் சுற்றி வந்தோம். கருவறையின் இடது புறமுள்ள பிரகாரத்தில் நடந்து வந்த பொழுது, ஓரிடத்தை, கோயில் பராமரிப்பாளர் கோபாலன் சுட்டிக் காட்டினார்.

     இந்த இடத்தில் ஒரு மேடு இருந்தது. ஒரு கட்டிடத்தின் அடிப்பகுதி. இது இராஜராஜ சோழனின் தங்கை குந்தவி தேவியின் சமாதி என்றே அக்காலத்தில், பலரும் கூறுவார்கள். ஆனால் இப்பகுதி சில வருடங்களுக்கு முன் அகற்றப்பட்டு விட்டது என்றார்.

    நண்பர்களே, கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்களால், குந்தவை தேவியை, தங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இராஜராஜ சோழனை வளர்த்து ஆளாக்கியவர். இராஜராஜ சோழனின் வழிகாட்டி. இராஜராஜ சோழனின் அன்புத் தமைக்கை.

     குந்தவையின் சமாதி இங்கிருந்தது, இது உண்மையா? அல்லவா எனத் தெரியாது. ஆயினும் இங்கிருந்த ஒரு கட்டிடத்தின் அடித்தளம் அகற்றப்பட்டுள்ளது. இவ்விடத்தை அகற்றாமல் புதுப்பித்திருக்கலாம் அல்லவா?

     எதிர்காலத்தில், ஏதேனும் ஒரு ஆவணத்தின் மூலமாக, குந்தவையின் சமாதி இருந்த இடம் இதுதான் என்று உறுதியானால், அப்பொழுது என்ன செய்ய இயலும்? பழமையைப் பாதுகாக்கப் தவறிவிட்டோமே.

      நண்பர்களே, தஞ்சையில் இருந்து முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும், நானும் மகிழ்ச்சியாகத்தான் புறப்பட்டோம். ஆனால் பயணம் மகிழ்ச்சியானதாக அமையவில்லை. போற்றப்படாத இராஜராஜன் சமாதி, பராமரிக்கப் படாத பழையாறை கோயில், புதுப்பித்தல் என்னும் பெயரில் அகற்றப்பட்ட குந்தவி தேவியின் சமாதி இவைகள் யாவும், உள்ளத்தில் சொல்லொன்னா வேதனையினையே உருகாக்கின.

     நண்பர்களே, இந்தத் தமிழ்த் தேசத்தின் பல்வேறு சாபங்களில் இதுவும் ஒன்று. நம் பழம் பெருமைகளை, போற்றிப் பாதுகாக்காதது. போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது.

     தமிழ் மொழியின் தொன்மை, மக்களுக்குத் தெரியாமல் போனது போல, தமிழர் நாகரிகத்தினுடைய தொன்மையும், அதன் மிச்சங்களும் காலவோட்டத்தில் கரைந்து கொண்டேயிருக்கின்றன.

     ஒரு நாள் நாமெல்லாம், அலட்சியம், அறியாமை என்னும் உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்து பார்க்கும் பொழுது, நாம் நமது அடையாளத்தை, தமிழன் என்னும் உன்னத முகவரியினை, இழந்த அனாதைகளாய், வரலாற்றின் பக்கங்களில் இருந்து கிழிக்கப்பட்டு, மறைந்து போவோம் என்பது மட்டும் உறுதி.

உதாவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா

என்று நம் உறக்கம் கலைக்க அன்றே எழுப்பிப் பார்த்தவர்தான் பாரதிதாசன். ஆனால் நாம் என்று விழிக்கப் போகிறோம் என்பதுதான் தெரியவில்லை.

No comments:

Post a Comment