தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்பார்
திருவள்ளுவர். நண்பர்களே, நாமும் நமது பணியினை நிறைவாகச் செய்ய வேண்டும் என்ற
எண்ணத்தில், தினமும் முயன்று கொண்டே இருப்பவர்கள்தான். ஆனாலும் நமது முயற்சியின்
எல்லை சிறியது, முயற்சிக்கும் காலமும் சிறியது.
நண்பர்களே, நாம் அனைவரும் புத்தகங்கள்
படிப்பவர்கள்தான். எத்துனையோ மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கரைத்துக்
குடித்தவர்கள்தான். இதிகாசங்களையும், இலக்கியங்களையும், காப்பியங்களையும் படித்தவர்கள்தான்.
ஆனால் நம்மில் எத்தனைபேர், நூல்கள் சுட்டும் திசையில் பயணித்திருக்கிறோம்.
நண்பர்களே, களப் பணி என்னும் சொல் இன்று
மிகவும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. தமிழாய்வாளர்கள் இன்று களப்பணி செய்து,
புதிய புதிய செய்திகளை, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்திலே பணியாற்றும்,
எனது நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், விடுமுறை நாட்களில், பௌத்தத்தின்
அடிச்சுவட்டைத் தேடி, சோழ நாடு முழுமையும் பயணம் செய்து கொண்டே இருக்கிறார்.
இன்று களப்பணி ஆற்றுவதற்கு தொடர் வண்டிகள்,
பேரூந்துகள், வானூர்திகள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வசதிகள் பல்கிப்
பெருகிவிட்டன. ஆனால் இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், பயண வசதிகள் என்ன
இருந்திருக்கும், என்பதை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள் நண்பர்களே.
ஒரு சில புகை வண்டிகள், மாட்டு வண்டிகள்,
குதிரை வண்டிகள், இரு சக்கர மிதி வண்டிகள் இவைதானே, அன்றிருந்தவை.
நண்பர்களே, தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச்
சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய பேராசிரியர்
சி.கோவிந்தராசனார் அவர்கள், இலங்கையைச் சார்ந்த பேரறிஞர், யாழ் நூல்
என்னும் தமிழ் இசை இலக்கண நூலின் ஆசிரியர், சுவாமி விபுலானந்த அடிகளாரிடம்,
சிலப்பதிகாரத்தைத் திறம்படக் கற்றவர். சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரது
மனதில் நீண்ட நாட்களாகவே, ஓர் ஆசை, ஏக்கம், கனவு. சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம்
செய்த, பாதை வழியாகவே, ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.
எண்ணித் துணிக
கருமம் துணிந்தபின்
எண்ணுவம்
என்பது இழுக்கு
பேராசிரியர்
சி.கோவிந்தராசனார் அவர்களும் எண்ணி, எண்ணித் துணிந்து இறங்கினார்.
நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள்,
பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கண்ணகியின் அடிச்சுவட்டில் பயணம் தொடங்கிய ஆண்டு
1945. ஆம் நண்பர்களே, இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், துணிந்து இறங்கினார்
.
நண்பர்களே, கண்ணகியின் அடிச்சுவட்டில்,
கண்ணகி பயணித்த பாதை வழியாகவே, இவரும் நடந்தே சென்றார். கல்லூரி விடுமுறையில்
நடந்தார், விடுமுறை எடுத்துக் கொண்டு நடந்தார். ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார்.
தனது உடமைகள் ஒவ்வொன்றையும், விற்று, விற்று, காசாக்கிக் கொண்டே நடந்தார்.
நண்பர்களே, இவர் நடந்தது ஒரு மாதம், இரு
மாதமல்ல, பதினேழு ஆண்டுகள் நடந்தார். முடிவில் சிலப்பதிகாரம் என்பது கற்பனைக்
கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தினார்.
அதுமட்டுமல்ல நண்பர்களே, சிலப்பதிகாரத்தில்,
குன்றக்குரவை என்னும் காதையுள், கண்ணகி மலைமேல், வேங்கை மர நிழலில்
நின்று தெய்வமான இடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன்
அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் கண்டுபிடித்து
உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரியவரும் இவரேதான்.
நண்பர்களே, பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
அவர்கள், பதினேழு ஆண்டுகள் செலவிட்டு, கண்ணகியின் பாதச் சுவடுகளைப் பின் பற்றி
நடந்த பாதையின் வழியே, நாமும் ஒரு புனிதப் பயணம் மேற்கொள்வோமா. வாருங்கள்
நண்பர்களே வாருங்கள்.
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்,
தனது பயணத் திட்டத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார்.
காவிரிப் பூம்பட்டிணம் முதல், காவிரியின்
வடகரை வழியாக, திருவரங்கம், உறையூர் வரையிலான பாதை, இவரது ஆய்வின் முதல் பகுதி.
உறையூர் முதல், கற்குடி, பூங்குடி,
விராலிமலை, கொடும்பாளூர் வழியாகப் பிரான் மலை, அழகர் மலை, மதுரை வரையிலான பாதை
இவரது ஆய்வின் இரண்டாம் பகுதி.
மதுரை மாநகர் ஆராய்ச்சி இவரது ஆய்வின்
மூன்றாம் பகுதி.
மதுரை முதல் வையை கரை வழியே நெடுவேள்
குன்றம் வரையிலான பாதை இவரது ஆய்வின் நான்காம் பகுதி.
1945 ஆம் ஆண்டின் ஓர் நாள், இவர் மயிலாடுதுறை
என்று இன்று அழைக்கப் படுகின்ற மாயுரம் வரை புகை வண்டியில் சென்றார்.
அங்கிருந்து இரு சக்கர மிதி வண்டிதான். அந்தக் காலத்தில், இவர் மாயுரத்தில் இறங்கி
விசாரித்த பொழுது, காவிரிப் பூம்பட்டிணம் எங்கிருக்கிறது என்று யாருக்குமே
தெரியவில்லை.
பலமுறை முயன்ற பிறகு, கடற் கரையில்
மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன், மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன்
காரைச் சூரைச் செடிகளும் செறிந்த புதர்களும், சவுக்குத் தோப்புகளும், புனங்
காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று, அன்று அழைக்கப் பட்டப் பகுதியே,
பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டுபிடித்தார்.
அங்கிருந்த மீனவர்களின் துணையோடு,
கட்டுமரத்தில் ஏறி, ஒரு கல் அளவு கடலில் பயணித்தார். கடல் ஆழமின்றி இருந்ததை
அறிந்தார். கடலில் மூழ்கி, மூச்சை அடக்கிக் கொண்டு, கடலுள் பயணிக்கும் பயிற்சி
பெற்றிருந்த முழுக்காளிகள் சிலரை, கடலினுள் மூழ்கச் செய்து, கடலடி ஆய்வு
செய்தார். கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற் பகுதிகள், சுண்ணக் காரைகள்,
பாசி படிந்த பானை ஓடுகள் என பலவற்றை எடுத்து வந்து இவரிடம் வழங்கினர்.
இவ்வாராய்ச்சியின் பயனாக, கடற்கோளினால்
அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப் பரப்பே, காவிரிப் பூம்பட்டிணம், கண்ணகி
பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.
1945 ஆம் ஆண்டில் பூம்புகாரில் ஆய்வினைத்
தொடங்கிய இவருக்கு, கால் நடையாக ஆராய்ந்து, ஆராய்ந்து, நடந்து, நடந்து மதுரை வரை
செல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப் பட்டன.
திருப்பரங் குன்றம் செல்லும் சாலையில்
பழங்காலத்தில், இடுகாடாக இருந்த கோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லத்தம்மன்
கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார்.
பிறகு, மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி,
சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன்
நடக்கத் தொடங்கினார்.
வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல் இன்றும் பயணிப்பதை கண்டு
கொண்டார்.
மதுரையில் இருந்து கோட்டையின் மேற்கு வாசல்
வழியாக மனமுடைந்து, வெறுப்பு உணர்ச்சியோடு, தனித்துப் புறப்பட்ட கண்ணகி, வையை
ஆற்றின் ஒரு கரையைப் பின்பற்றி, மேற்கு நோக்கி சென்று, நெடுவேள் குன்றத்தில் அடி
வைத்து ஏறி, மலை மேல் இருந்த, வேங்கை மரச் சோலையில் நின்று தெய்வமானாள்.
சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குப்
பத்தினிக் கோட்டம் நிறுவி, அதில், தான் இமயத்தில் இருந்து கொண்டு வந்த கல்லில்,
சிலை செய்து வைத்து வழிபாடு செய்தான். அச் செய்தியினை, அறிந்த கண்ணகியின் செவிலித்
தாயும், பணிப் பெண்ணும், தேவந்தி என்கிற தோழியும் சேர்ந்து, கண்ணகித் தெய்வத்தைக்
காண, காவிரிப் பூம்பட்டிணத்தில் இருந்து புறப்படுகிறார்கள். இவர்கள் மதுரைக்கு
வந்து, அங்கிருந்த மாதரியின் மகள் ஐயை, கண்ணகியைப் பற்றிக் கூறக் கேட்டு, அவளையும்
அழைத்துக் கொண்டு, வையை ஆற்றின் ஒரு கரை வழியாகச் சென்று, பெரிய மலையின் மேல் ஏறி,
கண்ணகியின் கோயிலை அடைந்தார்கள்.
நண்பர்களே, மேற்கண்ட இரு செய்திகளும்,
சிலப்பதிகாரக் கட்டுரைக் காதையிலும், வாழ்த்துக் காதை உரைப் பாட்டுப் பகுதியிலும்
இடம் பெற்றுள்ளன.
எனவே, மேலே கண்ட சிலப்பதிகார வழிகளின் படி
மதுரையில் இருந்து, தரை வழியாகச் சென்றால், வையை ஆற்றின் தென் கரையே, அதற்குரிய
வழி என்பதைப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் ஆராய்ந்து உணர்ந்தார்.
இவ்வழியைப் பின்பற்றி நடந்தப் பேராசிரியர்
சி.கோவிந்தராசனார், 40 மைல்களுக்கும் மேல் பயணித்து, வையை ஆற்றின் தென்புறம்
தொடர்ந்து நடந்து சுருளி மலைத் தொடரை அடைந்தார்.
சுருளி மலைத்தொடரின் மேற்குப் புறக்
கோடியில் உற்பத்தியாகும் வையை ஆறு, பள்ளத்தாக்கின் வழியாக, வடக்கு நோக்கி ஓடி,
தேனி அருகில், கிழக்கு நோக்கித் திரும்புகிறது. இங்கு குன்னூர் இருக்கிறது.
இங்கிருந்து கண்ணகி நடந்த வழியாகச் செல்வதற்கு காட்டிலும், கரம்பிலும், சதுப்பு
நிலத்திலும் ஓடி வரும் வையை ஆற்றைப் பின்பற்ற வேண்டும்.
குன்னூரில் இருந்து வையை ஆற்றைப் பின்பற்றி
நடந்து, எதிரில் நிற்கும் மலைத் தொடரின் குறுக்கே, எங்காவது ஓரிடத்தில் மலை மேல்
ஏறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்.
வையை ஒரு
கரைகொண்டு ஆங்கு நெடுவேள்
குன்றம்
அடிவைத்து ஏறினாள்
என்று இளங்கோ
அடிகள் கூறியிருப்பதற்கு ஏற்ப, இயற்கையில் அமைப்பு அவ்விடம் இருப்பதை அறிந்தார்.
மேல் சுருளிமலையின் ஒரு பகுதியை ஆராயத்
தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதி செய்தார்.
பண்டைக் காலத் தமிழ் மரபுப் படி, முருகனின்
பெயர்களுள் ஒன்று நெடுவேள் என்பதாகும். அப்பெயராலேயே, இம்மலைத் தொடர் அழைக்கப்
பட்டிருக்க வேண்டும் என முடிவு செய்தார்.
சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன்
குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி
மலை என்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னும் பெயர், மலையில்
இருந்து சுருண்டு விழும் அருவியின் பெயரால் சுருளி மலையாக மாறியிருக்க
வேண்டும் என்பதை உணர்ந்தார்.
சுருளி மலைத் தொடராலும், பழநி மலைத் தொடராலும்
இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல் சூழப்பட்ட பகுதியில், வர்ஷ நாடு
எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது.
வர்ஷ நாட்டின் மலைப் அடிவாரப் பகுதிகளை
ஆராய்ந்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கீழக் கூடலூருக்குத் தெற்கே உள்ள
கோயிலில் கல்வெட்டு ஒன்றினைக் கண்டு பிடித்தார்.
கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன் பூஜைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய
நிலங்களைப் பற்றிய செய்தி, அக்கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது.
நண்பர்களே, பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
அவர்களின் மனதில் ஒரு மின்னல் வெட்டியது. கண்ணகிக்கு அடைக்கலம் தந்தபொழுது,
அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை கவுந்தி
அடிகள், இடையர் குல மங்கையான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு நினைவிற்கு
வந்தது.
1963 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி,
மங்கலதேவி மலை ஆராய்ச்சிக்காக கூடலூருக்குச் சென்றார் பேராசிரியர். அடுத்த நாள் 17
ஆம் தேதி, அதிகாலை நான்கு மணிக்கு, ஊர் மக்கள் சிலரின் துணையுடனும், முத்து
மற்றும் கந்தசாமி என்னும், இவரது இரு மாணவர்களோடும் புறப்பட்டார்.
கூடலூரில் இருந்து மலையின் அடிவாரத்திற்குச்
செல்ல மூன்று மைல்கள் நடக்க வேண்டியிருந்தது. முல்லையாறு, காட்டாறு, களிமண் வழுக்கல், காடு
கரம்பு, யானைகளின் புழக்கம் ஆகியவற்றைக் கடந்தாக வேண்டியிருந்த்து. ஏழு மணிக்கு
மலை ஏறத் தொடங்கினார்கள். மலையில் தொடர்ந்து உயரும் மூன்று அடுக்குகளையும் ஏறிக்
கடக்க வேண்டியிருந்தது. இடையே பற்பல இடையூறுகள்.
ஒரு வழியாக, மங்கல தேவி மலையின் மேற்
பரப்பிற்கு வந்தார்கள். போதைப் புற்காடு எட்டடி உயரத்திற்கு வளர்ந்து மண்டிக்
கிடந்தது. அப் புதற்களுக்கு இடையில், ஓரிடத்தில், மூன்று சிற்ப வேலைப் பாடுகளுடன்
கூடிய பெரிய, பெரிய கற்களைக் கண்டார்.
அவற்றுள் இரண்டு கம்பமாக நிறுத்தப் பட்டிருந்த்து.
ஒன்று வில் வடிவமாக கம்பத்தின் மீது நிறுத்தப் பட்டிருந்த்து. வில் வடிவமான
கல்லின், ஒரு முகப்பில், மகர வாசிகையும, இரு பெண்களின் உருவமும் புடைப்புச் சிற்பங்களாகச்
செதுக்கப் பட்டிருந்தன. இதை ஆராய்ந்த்தில், இது ஒரு சிற்ப முறையிலான மகர தோரண
வாயில் என்பதை அறிந்தார்.
பேராசிரியருடன், உடன் வந்த உள்ளூர்
காரர்களில் ஒரு வேட்டைக் காரரும் இருந்தார். அந்த வேட்டைக் காரர், எல்லோரையும்
உரக்கக் கத்துமாறு கூறவே, அனைவரும் தங்களால் இயன்ற வரை ஒலி எழுப்பினர். எதிரே
திட்டாகத் தெரிந்த காட்டில் இருந்து எதிரொலி கிளம்பியது.
எதிரொலி கிளம்பிய திட்டைச் சுட்டிக் காட்டிய வேட்டைக் காரன், அதோ
தெரிகிறதே, அதுதான் வேங்கைக் கானல். அதனுள்ளேதான் கோட்டம் உள்ளது, அங்கிருந்துதான்
எதிரொலி வருகிறது என்றார்.
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின்
நெஞ்சம், ஒரு நிமிடம், துடிப்பதை சற்றே நிறுத்திவிட்டுப் பிறகு துடிக்கத்
தொடங்கியது. வேங்கைக் கானல், கோட்டம், ஆகா, ஆராய்ச்சியின் இலக்கைத் தொட்டு
விட்டோம். பதினேழு ஆண்டுகால ஆராய்ச்சிக்கு, உழைப்பிற்குப் பலன் கிடைத்து விட்டது.
மனம் மகிழ்ச்சியில் குதூகலிக்கத் தொடங்கியது.
இது எப்படி வேங்கைக் கானல் ஆகும்? கோட்டம்
என்றால் என்ன? யார் சொன்னது? என கேள்வி மேல் கேள்விகளால், வேட்டைக் காரனைத் துளைத்தெடுத்தார்.
அதெல்லாம் தெரியாதுங்க. இதை வேங்கைக் கானல்
என்றுதான் கூப்பிடுவாங்க. இதுக்குள்ளேதான மங்கல தேவி குடி. அதுதான் கோட்டம்.
இதுக்கு இதுதான் பேரு என்றார்.
வேங்கைக் கானல் என்ற பெயரைக் கேட்டவுடன்
கோவிந்தராசனார் அவர்களின் உடல் ஒரு முறை சிலிர்த்தது. உள்ளத்தில் புதிய சக்தி
பிறந்தது. கானலில நுழைந்தார். 200 அடி பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக
உள்ளதுமாகிய கோட்டத்தைக் கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே
வராத வகையில், மதிர் சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக்
கிடந்தது. மரங்கள் நிறைந்திருந்தன.
செடி, கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த
நிலையில் நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள்
சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன. இக் கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும்,
தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்த்து.
கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகான
படிக்கட்டு. அதற்கு முன்னர் அரை குறையாகக் கட்டப் பட்டு, குத்துக் கற்களுடன்
நிற்கும் வாயில். கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை.
சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்து இருண்டு
நிற்கும் காட்டு வேங்கை மரங்கள்.
மிகப் பழமையோடு கூடியதும், பலி பீடத்துடன்
உள்ளதுமாகிய மூன்றாவது கோயிலின் அருகினில் சென்றார்.
உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே
கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலது காலை ஊன்றிய
நிலையில், ஒரு பெண்ணின் சிலை.
அப்பெண்ணின் தலையில் கிரீடம் இல்லை.
விரிந்த கூந்தல். இடதுப் புற மார்பு சிறியதாக இருந்தது.
நண்பர்களே, இதுதான், இதுதான் நண்பர்களே
சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலை. படிக்கும் நமக்கே, இவ்வளவு
மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகிறதே, இதனைக் கண்டு பிடித்த பேராசிரியர்
சி.கோவிந்தராசனார் எவ்விதம் இருந்திருப்பார். உள்ளத்தில் உணர்ச்சிகள் அலைமோத,
உற்சாகக் கடலிலே அல்லவா மிதந்திருப்பார். பதினேழு ஆண்டுகால இடையறா முயற்சி அல்லவா?
கண்ணகி சிலை செய்யப் பெற்றக் கல், திண்மை
இல்லாத, ஒருவகைக் கருங்கல். அதனால் அழிந்த அக் கட்டடத்தில் இருந்து , கீழே விழுந்த
கற்களால் சிதைந்து போயிருந்தது. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலையல்லவா.
பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு
உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது.
இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில், பல
இடங்களில் குறிப்பிடும், நெடுவேள் குன்றமும், பத்தினிக் கோட்டமும் இதுதான்
நண்பர்களே. சேரன் செங்குட்டவன் அமைத்த கண்ணகி சிலையும் இதுதான்.
கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில்,
21.3.1965 அன்று ம.பொ.சி அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில்தான்
முதன்முதலாக, கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றி வெளியுலகிற்குத் தெரியப்
படுத்தினார். தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.
இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது,
தனது கண்டுபிடிப்புப் பற்றி சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார். அன்றைய
தமிழக முதல்வர் அவர்கள், 17.5.1971 அன்று பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களைக்
அழைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற, இளங்கோவடிகள் சிலைத் திறப்பு
விழாவின் போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் கண்டுபிடிப்பு பற்றி,
தமிழக முதல்வரே , தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.
தேடிச்
சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித்
துன்பமிக வுழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக்
கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை
மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
என்று பாடுவாரே
பாரதி. அம்மகாகவியின் வரிகளுக்கு ஏற்ப, வேடிக்கை மனிதராய், வகுப்பறையே உலகென்று
வீழ்ந்து விடாமல், வீறு கொண்டு எழுந்து, நடையாய் நடந்து, மலைதனில் மறைந்த
வரலாற்றிற்கு உயிர் கொடுத்து, உலகறியச் செய்த மாமனிதரல்லவா இவர்.
பதினேழு ஆண்டுகள், ஒரே சிந்தனை, ஒரே செயல்.
சாதித்துக் காட்டிய மனிதரல்லவா பேராசிரியர் சி.கோவிந்தராசனார்.
நண்பர்களே, பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
அவர்கள், இன்றும் நலமுடன் உள்ளார். அவருக்கு வயது 94. பத்தினி தெய்வம் கண்ணகியை
நமக்கு மீட்டுக் கொடுத்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், இன்னும் நூறாண்டு வாழ
வாழ்த்துவோம். அவர்தம் உழைப்பை எந்நாளும் போற்றுவோம்.