Saturday, September 6, 2014

கங்கை கொண்ட சோழபுரம்

நண்பர்களே, மனம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. எனது அழைப்பினை ஏற்று, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், எங்களுடன் இணைந்து, எங்கள் குல தெய்வம் கோயிலுக்கு, வருகை தந்த, தங்களுக்கு, எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெள்ளத் தெளியாகப் புரிகிறது. இனி இக்குல தெய்வம், எங்கள் குல தெய்வம் மட்டுமல்ல, இன்று முதல் இத் தெய்வம், நம் குல தெய்வம்.

      எனது மனைவியின் விருப்பப்படி, பட்டீசுவரம் துர்க்கையையும், வைத்தீசுவரன் கோயில் வைத்தியநாத சுவாமியையும் தரிசித்தாகிவிட்டது.

      அடுத்து

                கங்கை கொண்ட சோழபுரம்.

     வைத்தீசுவரன் கோயிலில் இருந்து ஒரே நேர் சாலை, 34 கி.மீ. அணைக் கரையை வந்தடைந்தோம். அணைக்கரையின் இரு பாலங்களையும் கடந்து, சிறிது தூரத்திலேயே, இடதுபுறமாகத் திரும்பும் சாலையின், கைகாட்டி அறிவித்தது. கங்கை கொண்ட சோழபுரம் 2 கி.மீ.

     நண்பர்களே, ஆயிரம் ஆண்டு அதிசயம், காலத்தை வென்ற கலைச் சிகரம், நம்மை வா, வா என அழைக்கிறது வாருங்கள்.

      கங்கை கொண்ட சோழபுரம்.  ஊருக்குள் நுழைந்ததுமே, நம்மை அறியாமல், நம் நெஞ்சம் நிமிர்ந்து விரிகிறதல்லவா? மனதில் இனம் புரியாத ஓர் உணர்வு, பெருமித உணர்வு பரவுகிறதல்லவா?

     கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், மலைநாடு கொண்டான், உத்தமச் சோழன், உதார விடங்கன், மதுராந்தகன், மனுகுலச் சோழன், பராக்கிரம சோழன், விக்கிரம சோழன் எனப் பலவாறு போற்றப்பெற்ற, இராஜேந்திர சோழனின் காலடி படிந்த, படர்ந்த உன்னத பூமியல்லவா.

     சுமார் 36 இலட்சம் சதுர கி.மீ., நிலப் பரப்பு. இன்றைய இந்தியாவை விட, 4 இலட்சம் சதுர கி.மீ அதிகம்.

     இப் பக்கம் இலங்கை, அப் பக்கம் வங்கதேசம், இடையில் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள். கடல் கடந்து மாலத் தீவு, மலேசியா, சிங்கப்பூர், ஜாவா, சுமத்ரா, பிலிப்பைன்ஸ் என கிழக்காசிய நாடுகளின் பெரும் பகுதியை, தன் நிகரற்ற வீரத்தால், மதி நுட்பத்தால் வென்ற மாமன்னன் இராஜேந்திர சோழன், இதோ இச்சிற்றூரில் இருந்துதான், நல்லாட்சி புரிந்திருக்கிறான் என்பதை எண்ணும்போதே விழிகள் வியப்பால் விரிகிறதல்லவா.

     நண்பர்களே, நாம் இம்மண்ணில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து எத்துணையோ வருடங்கள் ஆகிவிட்டன. சில நாட்களில், நமக்கு, திடீரென மனதில் ஓர் எண்ணம் நிச்சயம் தோன்றியிருக்கும், நமது மனசாட்சியே நம்மை கேள்வி கேட்டிருக்கும்.

      இத்தனை வருடங்களில் நீ எதைச் சாதித்தாய். நினைத்துப் பார்த்தால், இத்தனை காலமும் நாம், இப் பூமிக்குப் பெரும் சுமையாகத்தான் வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் நண்பர்களே, பத்து ஆண்டுகள், பத்தே ஆண்டுகள், ஆம் பத்தே ஆண்டுகளில் நினைத்ததை எல்லாம் சாதித்துக் காட்டியவன்தான் மாமன்னன் இராஜேந்திரன்.

      இராஜேந்திர சோழன் மன்னனாய் அரியணை ஏறிய ஆண்டு கி.பி. 1012.  முடிசூடிக் கொண்ட, முதல் நாளே, தஞ்சையில், அரியணையில் அமர்ந்து, ஓர் மாபெரும் கனவு கண்டான். அக்கனவினை நிறைவேற்ற, அன்று முதல் தூக்கம் துறந்தான். செயல், செயல், என ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியையும் செயலுக்கே அர்ப்பணித்தான்.

     இராஜேந்திரனின் முதல் சாதனை, புதிதாய் ஓர் தலை நகரையே கட்டி எழுப்பியதுதான். தஞ்சையில் இருந்து தலை நகரை மாற்றியது ஏன்? தஞ்சைக்கு என்ன குறை? தஞ்சையில் எது இல்லை? என்ற கேள்விகள் அடுக்கடுக்காய் எழுகின்றன அல்லவா? தலை நகர் மாற்றத்தின் பின்னனியில் இருந்தது, ஓர் உயரிய நோக்கம். ஓர் உன்னத நோக்கம்.

     சோழர் படையில் இலட்சக் கணக்கான படை வீரர்கள், தளவாடங்கள், ஆயிரக் கணக்கானக் குதிரைகள், யானைகள். விளை நிலங்கள் எல்லாம் படைக் களமாக மாற்றப் பட்டிருந்தன. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் போதும், வீரர்களின் பயணப் பாதையாகி, விளை நிலங்கள் பாழ்பட்டன. இடையே பல்வேறு ஆறுகளையும் கடக்க வேண்டிய கட்டாயம்.

      இராணுவத்தால், படை நகர்வால், விவசாய நிலங்கள் பாதிப்பு அடைவதை,  இராஜேந்திரன் ஒருபோதும் விரும்பவில்லை. இந்நிலைத் தொடரக் கூடாது என்று நினைத்தான். எனவே விளை நிலங்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில், கொள்ளிடத்தின் வடகரையைத் தேர்ந்தெடுத்தான்.

      முதலில் ஊருக்கு மேற்கே, ஒன்றல்ல, இரண்டல்ல, 16 மைல் நீளத்திற்கு, கடல் போல், ஒரு ஏரியை உருவாக்கினான். சோழ கங்கம். தன் தந்தை கட்டிய, தஞ்சைப் பெரியக் கோயிலுக்கு இணையாக, நிகராக, ஓர் புதிய கோயிலைக் கட்டி எழுப்பினான். அதன் அருகிலேயே, தனக்கென ஒரு அரண்மனையை நிர்மாணித்தான்.

       புதிதாய், புத்தம் புதிதாய் ஓர் நகரம், கங்கை கொண்ட சோழ புரம் உருவாகிக் கொண்டிருந்த, அதே காலத்தில், ஓர் பெரும் படை புறப்பட்டது. இப்பக்கம் இலங்கை, அப்பக்கம் வங்க தேசம், இடையில் ஆந்திரா, கர்நாடகா என அனைத்தும் இராஜேந்திரன் கைவசமானது.

     நண்பர்களே, அக்கால சோழ நாட்டு வணிகம் எல்லையற்று விரிந்த ஒன்றாகும். சோழ நாட்டு வணிகர்களுக்கு, இடைஞ்சலாய் சில நாடுகள். வணிகப் பொருட்கள் கொள்ளையடிக்கப் பட்டன.

     இந்நிலையை மாற்ற நினைத்த மாமன்னன் இராஜேந்திரன், தன் கப்பல் படையை வலிமையாக்கினான். ஆயிரக் கணக்கான யானைகளை, குதிரைகளை, இலட்சக் கணக்கானப் படை வீரர்களைச் சுமந்து செல்ல, ஆயிரமாயிரம் கப்பல்களைக் கட்டுவித்தான். நண்பர்களே நினைத்துப் பாருங்கள், ஆயிரமாயிரம் யானைகளைக் கப்பல்கள் சுமந்தாக வேண்டும், அதற்கெல்லாம் எப்படிப்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். நினைத்தாலே மலைப்பாக இருக்கிறதல்லவா.

     மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா, சீனாவின் கான்டன் தீவு வரை கைப் பற்றினான்.

      நண்பர்களே, இதையெல்லாம் செய்து முடிக்க, சாதித்து முடிக்க, இராஜேந்திரன் எடுத்துக் கொண்ட காலம், வெறும் பத்து ஆண்டுகள் மட்டும்தான்.

     பத்தே வருடங்களுக்குள் புதிதாய் ஓர் தலை நகர். அதில் பெரிதாய் ஒரு கோயில். கங்கை வரை ஆட்சி. கடல் கடந்தும் வெற்றிகள் என பத்தே ஆண்டுகளில் அனைத்தையும் செய்து முடித்தான்.

      மாமன்னன் இராஜேந்திரன் நடத்திய எல்லா போர்களுக்குப் பின்னாலும் இருந்த ஒரு வலுவான நோக்கம், உண்மையான இலட்சியம் என்ன தெரியுமா? நண்பர்களே.

      அமைதி, அமைதி, அமைதி ஒன்று மட்டுமதான். ஓர் நல்ல நிர்வாகி, தன் நாட்டு மக்களுக்குத் தரக்கூடிய ஓர் உயர்ந்த பரிசு, அமைதி அல்லவா? இராஜேந்திரன் இந்த அமைதியைத்தான் வாரி வாரி வழங்கினான்.

     அமைதியான வாழ்வு, அமைதியான வணிகம். அமைதியான உணவு. அமைதியான, செழிப்பான வாழ்க்கை.

     மாமன்னன் இராஜேந்திரன், கி.பி.1025 க்குள் இப்பணிகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு, கங்கை கொண்ட சோழபுரத்தில் குடியேறினான். இராஜேந்திரன், கங்கை கொண்ட சோழபுரத்தில் குடியேறிய பிறகு, சோழப்படைகள் எங்கும் நகரவே இல்லை.

      அதன் பிறகு கி.பி.1044 வரை, சுமார் பத்தொன்பது ஆண்டுகாலம், தன் இறுதி மூச்சு உள்ளவரை, மக்கள் நல்வாழ்விற்காகவும், நிர்வாக மறுமலர்ச்சிக்காகவுமே பாடுபட்டான்.

           நண்பர்களே, இதோ கங்கை கொண்ட சோழேசுவரர் ஆலயம். என்னவொரு அழகு, என்னவொரு கம்பீரம் பாருங்கள்.

     வாருங்கள் உள்ளே செல்வோம். இதோ நந்தி. கருவறையை நோக்கி அமர்ந்துள்ள நந்தியைப் பாருங்கள். மிகப் பெரிய சுதையால் ஆன நந்தி.

     வாருங்கள் படியேறி உள்ளே செல்வோம். பரசிவம் என்னும் பெயருக்கேற்ப, கோயிலின் கருவறையில் உள்ள லிங்கம், தென்னிந்தியாவிலேயே பெரியது ஆகும். லிங்கத்தினைச் சுற்றிக் கருவறைச் சுவரும், கருவறைச் சுவரினைச் சுற்றி, மற்றொரு சுவரும் உள்ளது. இவ்விரு சுவர்கள்தான் கோபுரத்தைத் தாங்கி நிற்கின்றன.

     கருவறையின் இரு சுவர்களுக்கும் இடையில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவோம் வாருங்கள். பார்த்து வாருங்கள் நண்பர்களே, பகல் பொழுதிலேயே இருள் சூழ்ந்திருக்கிறது பாருங்கள்.

     கோயில் வளாகத்தின் தென்புறத்திலும், வடபுறத்திலும் இரு கற்றளிகள். தென் புறத்தில் தென் கைலாயம், வடபுறத்திலே வட கைலாயம்.

      நண்பர்களே இதோ பாருங்கள் சிறுவர்களை மிகவும் கவர்ந்திழுக்கும் வகையில் சிம்மக் கேணி. சிங்க முகத்துடன் கூடிய நுழைவு வாயில். உள்ளே படிக்கட்டுகள். இப்படிகளில் இறங்கி கேணியின் உட் பகுதிக்குச் செல்லலாம்.

     வளாகத்தைச் சுற்றி வர வர, எங்கெங்கும் எழிலோவியமாய் கண் கவர் சிற்பங்கள்.

     நண்பர்களே, கோயிலின் மதில் சுவரை ஒட்டி, உட்புறமாக, நாற்புறமும் இரண்டடுக்கு மண்டபம். ஆனால் ஒரு சிறு இடத்தில் மட்டுமே, இரண்டடுக்கு மண்டபம் மிச்சமிருக்கிறது. மற்றைய இடங்களில், பிற்காலத்திய படையெடுப்பினால், தரையோடு தரையாகக் கிடக்கும் கற்கள் மட்டுமே காணப்படுகின்றன.

      நண்பர்களே, நாம் அவசியம் காண வேண்டிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம், இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது வாருங்கள்.

      மகிழ்வுந்து புறப்பட இருக்கிறது. வந்து அமருங்கள். இதோ மகிழ்வுந்து புறப்பட்டு விட்டது, ஒரு சில நிமிடப் பயணம்தான். இதோ இடதுபுறமாக ஓர் சாலை செல்கிறதே, அதில் செல்வோம் வாருங்கள்.

     இதோ மீண்டும் இடதுபுறமாக, ஓர் குறுகிய தெரு செல்கிறது பாருங்கள், அவ்வழியே செல்வோம்.

      நண்பர்களே, இதோ இது, இதுதான் மாளிகை மேடு.

      கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்று போற்றுகின்றோமே, அம்மன்னன், மாமன்னன் இராஜேந்திரனின் அரண்மனை இருந்த இடம் இதுதான்.

     கால வெள்ளத்தாலும், பிற்காலப் படையெடுப்புகளாலும், இயற்கைப் பேரிடர்களாலும், அரண்மனை மண்ணோடு மண்ணாய்ப் புதைந்த இடம் இதுதான்.

     1980 முதல் 1991 வரை, தொல்லியல் துறையினரால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது. அதன் பயன் இதோ, அரண்மனையின் அடித்தளப் பகுதி மீட்கப் பட்டு கம்பீரமாய் காட்சியளிக்கிறது.

       நண்பர்களே, அரண்மனையின் இச் சுவர்களைப் பாருங்கள். அரண்மனை முழுவதும் இரண்டிரண்டுச் சுவர்கள், தொடர் வண்டித் தண்டவாளங்களைப் போல் இணைந்தே செல்வதைப் பாருங்கள். இரு சுவர்களுக்கும் இடையில் மணல் போட்டு நிரப்பி வைப்பார்களாம். இது கடும் கோடையில் கூட, குளிர்ச்சியைத் தருமாம். என்னவொரு நுட்பம் பார்த்தீர்களா.

     இரும்புப் பொருட்கள், கதவுக்குப் பொருத்தப் பயன் படும் ஆணிகள், செம்பு குறுவாள் கைப் பிடி, கூரை ஓடுகள், அலங்காரப் பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், மணிகள், பானைகள், குறியீடுகளுடன் கூடிய செங்கல் கற்கள் என இவ்விடத்தில் கிடைத்தப் பொருட்கள் ஏராளம், ஏராளம்.

      வாருங்கள் நண்பர்களே, இராஜேந்திரச் சோழனின் அரண்மனைச் சுவரைத் தொட்டுப் பார்ப்போம். அரண்மனைச் சுவரைப் பற்றிய படியே சிறிது நடப்போம் வாருங்கள். இராஜேந்திரனின் காலடித் தடம் இவ்விடத்தில் பதிந்திருக்கும் அல்லவா.

       அரண்மனைச் சுவரைத் தடவியபடியே நடக்க, நடக்க, நெஞ்சில் ஏதேதோ நினைவலைகள். இது போன்ற செங்கல் கற்களை, கட்டுமானத்தை, கட்டுமானத்தின் எஞ்சிய அடித் தளத்தைப் பார்த்துப் பரவசப்பட்ட நினைவுகள், நெஞ்சில் அலை அலையாய் மோதுகின்றன.

        நண்பர்களே, நான்காண்டுகளுக்கு முன்னர், இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்று வருவதற்கான ஓர் அருமையான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. விடுவேனா? பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன். இலங்கையின் கொழும்புவிலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் கால்பதித்துத் திரும்பினேன்.

கங்கா நதியுங் கடாரமும் கைக்கொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன்

என கலிங்கத்துப் பரணியில், ஜெயங்கொண்டரால், போற்றப்படும் இராஜேந்திரச் சோழன் கைப் பற்றிய கடாரத்தில், ஓர் நாளினைக் கழிக்கும் பேரின்பத்தையும் பெற்றேன். கடாரம் இப்பொழுது கெடா என்றே அழைக்கப் படுகிறது.

      கெடாவில் உள்ள குவாண்டன் என்னும் ஆறானது மிகவும் அகலமானதும், ஆழமானதும் ஆகும். இந்த ஆறு, மலேசியாவின் கீழ்க் கரையில் தஞ்சய் தவாய் என்னும் இடத்தில் கடலோடு கலக்கிறது.

      கடல் வழி வந்த சோழப் படைகள், இவ்வாற்றின் வழியாகத்தான் நகருக்குள், கடாரத்திற்குள் நுழைந்தன. இந் நதியின் கரையில் மெய்மறந்து நின்றிருக்கிறேன்.

     கெடா அருங்காட்சியகத்தில், அகழ்வாய்வில் தோண்டியெடுக்கப் பட்ட கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பெற்றிருந்ததைக் கண்ணால் கண்டு, கையால் தடவிப் பார்க்கும் பேறும் பெற்றேன்.

       அருங்காட்சியகத்திற்கு வெளியே, மிகவும் சிறியதும், இரண்டடி அகலமும், சுமார் பத்து அடி அகலமும் கொண்ட படகுகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையப் படகுகள் இவை.

      நண்பர்களே, வியப்பினும் பெரு வியப்பு காத்திருப்பது தெரியாமல், அருங்காட்சியகத்தை அடுத்திருந்த, மலைப் பகுதியில் சிறிது தூரம் நடந்தேன். கண்ணெதிரில் விரிந்த காட்சியைக் கண்டு மலைத்து, சில நிமிடங்கள் நடக்கக் கூட மறந்து நின்றேன். ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்கால, சோழர் காலக் கோயில்களின் மிச்சங்கள். எச்சங்கள்.

      கடாரத்தின் சோழர் கால கோயில்களின் மிச்சங்களைக் கண்டு களித்த எனக்கு, இராஜேந்திரனின் அரண்மனையில் கால் பதிக்கும் ஓர் அற்புத வாய்ப்பு இன்றுதான் கிட்டியிருக்கிறது.

     நண்பர்களே, நாம் நிற்பது, அரண்மனையின் எப் பகுதியாக இருக்கும்? இராஜேந்திரன் சிம்மாசனத்தில் அமர்ந்து, அமைச்சர்கள் புடை சூழ, நல்லாட்சி நடத்திய அரசவைக் கூடமாகக் கூட இருக்கலாம் அல்லவா?

     ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாமன்னன் இராஜேந்திரன் காலடி பதிந்த மண்ணில், இன்று நாமும் நிற்கிறோம். இராஜேந்திரன் சுவாசித்தக் காற்றின் மிச்சத்தை, நாமும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

     ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இவ்விடத்தில், அரியணையில் அமர்ந்திருந்த மாமன்னன், இன்று இப்பொழுது, நம் இதயச் சிம்மாசனத்தில் அல்லவா கம்பீரமாய் அமர்ந்திருக்கிறான்.

வாழ்க கங்கை கொண்டான்
வாழ்க கடாரம் கொண்டான்

 


                   

No comments:

Post a Comment