Saturday, August 30, 2014

நேசமே, சுவாசமாய்

நேசன் என்றால் நண்பனாவான். ஒருவன் தன் நண்பனிடத்துச் செலுத்துகின்ற பாசம் நேசமாகும். நம் அனைவருக்கும் நேசர்கள், நண்பர்கள் உண்டு. எனினும் உண்மை நேசத்தோடு பழகுபவர்கள் எத்துனை பேர்?
     சேரமானும் சுந்தரரும் போல, கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் போல, ஔவையாரும் அதியமானும் போல, என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்களைத்தானே, நட்பிற்கு இலக்கணமாய், எடுத்துக்காட்டாய் இன்றளவும் கூறிவருகின்றோம். தற்காலத்தில், அல்லது சமீப காலத்தில் நட்பிற்கு எடுத்துக் காட்டாய் வாழ்ந்தவர்கள் யாருமில்லையா? இருக்கின்றார்கள்.
     நேசத்தினையே சுவாசமாய் சுவாசித்து, வாழ்ந்த மாமனிதர் ஒருவரைக் காண்போமா?  கால இயந்திரத்தில் ஏறி சற்றுப் பின்னோக்கிப் பயணிப்போம், வாருங்கள்.. வருடங்கள் பின்னோக்கிச் செல்கின்றன. இதோ தஞ்சாவூர் வடவாற்றின் வடகரையினில் அமைந்திருக்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் தெரிகிறது. கீழிறங்குவோமா.
    அதோ, அரச மரத்தடியில், மூத்த பிள்ளையார் சிலைக்கு அருகில், வெற்றிலையினை மென்றபடி, மலர்ந்த முகத்துடன், இதழ்களில் புன் சிரிப்புடன், கவிதை எழுதிக் கொண்டிருக்கிறாரே, யார் இவர்?
             கருமைஉரு வெண்மைப்பல்  நரைத்ததலை 
                     கறையற்ற  செம்மைமனம்  புன்சிரிப்பு  எளிமைநிலை
                      பிறைகறுத்த  பெருநெற்றி  அதில்மணக்கும்  நறுஞ்சாந்தம்
                      மறைவல்ல  ஒளிமுகத்திற்  கொப்புமையும்  இலையன்றோ
                                                          -சி.அரசப்பன்
ஓ, கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை என்பவர் இவர்தானா?
     ஆம். ஆருயிர்த் தோழன் சங்கம் நிறுவிய துங்கன் த.வே.இராதாகிருட்டினனுக்காகவும், தமிழ் மணம் கமழும் தமிழவேள் உமாமகேசுவரருக்காகவும், தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த கரந்தைக் கவியரசு  இவர்தான்.
     உடல் தளர்ந்து,  கால்கள் வலுவிழந்து நடக்க இயலாத நிலையில் கூட, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை விட்டு அகலாது, தனது இறுதி மூச்சுவரை,  நேசம் காத்த, பாசம் போற்றிய கரந்தைக் கவியரசர் இவர்தான். கவியரசரின் நேச வரலாற்றினை அறிந்து கொள்வோம் வாருங்கள். 
         கரந்தை என்ற சொல்லுக்கு மீட்டல் என்ற ஒரு பொருளுண்டு. தமிழ் மொழியின் இழந்த பெருமைகளை மீட்கத் தோன்றிய அமைப்புக் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.இதன் முதல் தலைவராய் அமர்ந்து முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றியவர் தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களாவார். இம்முப்பதாண்டுகளும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராய் பொறுப்பேற்று, உமாமகேசுவரனாருடன் உடனிருந்து உழைத்த, உதவிய, சங்கத்தை உயர்த்திய உன்னதப் புகழுக்குரியவர் கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிளையாவார்.
       எந்நன்றி   கொன்றார்க்கும்   உய்வுண்டாம்  - உய்வில்லை
       செய்ந்நன்றி  கொன்ற  மகர்க்கு
என்று நன்றியறிதலையும்,
        நட்பிற்கு  வீற்றிருக்கை  யாதெனில்  கொட்பின்றி
        ஒல்லும்வாய்  ஊன்றும்  நிலை
எனறு நட்பின் பெருமையையும் ஆணித்தரமாகப் பதிவு செய்வார் திருவள்ளுவர். இவ்விரண்டு குறள்களுக்கும் எடுத்துக்காட்டாகவே வாழ்ந்து காட்டிய பெருமைக்குரியவர் கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்களாவார்.
        கவியரசு அவர்கள் தஞ்சைக்கு அருகிலுள்ள, மோகனூர் என்னும் சிற்றூரில் 1886 ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் ஐந்தாம் நாள் பிறந்தவர். தொடக்கக் கல்வியை மோகனூரிலேயே அமைந்திருந்த திண்ணைப் பள்ளியில் கற்றார். தொடர்ந்து தஞ்சாவூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள தூய பேதுரு கல்வி நிலையத்தில் சேர்ந்தார். தூய பேதுரு கல்வி நிலையத்தில் இவரின் வகுப்புத் தோழராய், இன்னுயிர் நண்பராய் அமைந்தவர் இராதாகிருட்டினன் ஆவார். இவர் வேறு யாருமல்ல, பின்னாளில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி சங்கம் நிறுவிய துங்கன் எனப் போற்றப்பெற்ற இராதாகிருட்டினன் ஆவார். கவியரசரும், இராதாகிருட்டினனும் ஈருடல் ஓருயிராய் பழகத் தொடங்கினர். இராதாகிருட்டினனுடைய நட்பானது கவியரசரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது.
      தூய பேதுரு கல்வி நிலையத்தில் இவர்களுக்குத் தமிழாசிரியராய் இருந்தவர் குயிலையா என்றழைக்கப்பெற்ற ஆர். சுப்பிரமணிய அய்யராவார். குயிலையாவிடம் நன்னூல், திருக்குறள்,சீவக சிந்தாமணி போன்ற சிறந்த இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். குயிலையா தமிழ்ப் பாடல்களோடு தமிழுணர்வையும் சேர்த்தே ஊட்டினார்.
    
மகுடியின் ஓசைகேட்ட நாகம் போல, தமிழின் இனிமை கண்டு மயங்கிய கவியரசர், தமிழமுதைத் தேடித் தேடிப் பருகினார். தாமே முயன்று தமிழ்த் துறையில் சிறந்த அறிஞர்கள் பலரை தேடிச் சந்தித்துக் கற்றுத் தேர்ந்து தமிழ்த் துறையில் மிகுந்த புலமை பெற்றவரானார். ஆயினும் தனக்கு முதன் முதலில் தமிழின் சுவை உணர்த்திய குயிலையா சுப்பிரமணிய அய்யரை மறக்கவில்லை. குயிலையாவிற்குத் தான் செலுத்தும் குருதட்சனையாக ஆசானாற்றுப் படை எனும் கவிதை நூலைப் படைத்தார். இந்நூலுக்குப் பதிப்புரை எழுதி வெளியிட்டவர் யார் தெரியுமா? சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன்.
      இந்நூலைப் பற்றிய மிகுந்த வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், இந்நூல் வெளியிடப்பெற்ற ஆண்டு 1910 ஆகும். அதாவது தனது 24 ஆம் வயதிலேயே கவிபுனையும் ஆற்றல் கைவரப்பெற்றவர் கவியரசு அவர்களாவார்.
      இது மட்டுமல்ல தனது குழந்தைக்கு அத்தமிழாசிரியரின் நினைவாக சுப்பிரமணியம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
       1911 ஆம் ஆண்டு மே திங்கள் 14 ஆம் நாள் சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன் அவர்களின் பெருமுயற்சியால் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்றது.நண்பர் இராதாகிருட்டினன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழவேள் உமாமகேசுவரனார் அவரகள் சங்கத்தின் முதல் தலைவராகவும், கரந்தைக் கவியரசு அவர்கள் சங்கத்தின் முதல் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 1916 ஆம் ஆண்டு செந்தமிழ்க் கைத் தொழிற் கல்லூரி ஒன்று தொடங்கப் பெற்றது. அவ்வமயம் கவியரசு அவர்கள் கோணார் பற்று என்னும் ஊரில் அமைந்திருந்த கற்பக விநாயகா கலா சாலையில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தார்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார் அவர்கள் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தினாலும் நட்பினாலும், கோணாற் பற்றில் தனது பணியினைத் துறந்து, கோணாற் பற்றில் பெற்று வந்ததைவிட குறைந்த ஊதியத்தில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்ச் கைத் தொழில் கல்லூரியில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார்.
     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோற்றம் பெற முழுமுதற் காரணமாக விளங்கியவரும்,கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளராகத் தன்னை அமர்த்தி, தான் மட்டும் தொண்டனாகவே இருந்து, தமிழ்ப் பணியாற்றியவருமான சங்கம் நிறுவிய துங்கன் த.வே.இராதாகிருட்டினன் அவர்கள் 1918 ஆம் ஆண்டில், தனது 33 ஆம் வயதிலேயே அகால மரணமடைந்தபோது, அனலிடைப் புழுவாய்த் துடித்தார்.
        என்றிளைய  பருவத்தே எழுந்துநின்  னட்பம்மா
        அன்றுமுதல்  யாமெய்துஞ்  சிரெல்லாம்  அதன்பயனே
        நன்றுதரும்  நண்பாவோ  நண்பாவோ  நண்பாவோ
        ஒன்றுளத்து  நினையன்றெம்  மூக்கமதே  யிழந்தனமே.
எனப் பலவாறு வருந்தி துயறுற்ற கவியரசு அவர்கள் செந்தமிழ்க் தைத் தொழில் கல்லூரியின் சார்பில் இராதாகிருட்டினன் கழகம் என்னும் பெயரில் கழகமொன்றைத் துவக்கி, இராதாகிருட்டினன் நினைவினைப் போற்றி வரலானார்..
      உமாமகேசுவரனாரின் தொடர் முயற்சிகளின் விளைவாக, திருவையாற்றின் வட கரையில் செயல் பட்டு வந்த வடமொழிக் கல்லூரியானது, தமிழ்க் கல்லூரியாக, அரசர் கல்லூரியாக மாற்றப் பெற்றது.மிகச்சிறந்த புலமைவாய்ந்த கவியரசர் அவர்கள் செந்தமிழ்க் கல்லூரியில் சிறுவர்களுக்குத் தமிழ் எழுத்துக்களைச் சொல்லித் தருவதைவிட, திருவையாற்று அரசர் கல்லூரியில் பேராசிரியராய் பணி செய்து அதிக எண்ணிக்கையில் தமிழ்ப் புலவர்களை உருவாக்கினால் தமிழ் மொழி மேலும் வளம் பெறும் என்று உமாமகேசுவரனர் எண்ணினார்.உமாமகேசுரனாரின் விருப்பப்படியே கரந்தைக் கவியரசு அவர்கள் 1932  ஆண்டு திருவையாற்று அரசர் கல்லூரியில் பேராசிரியராய் பணியில் சேர்ந்தார்.
     1938 ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவின் போது, அரங்க வேங்கடாசலம் பிள்ளை அவர்களுக்குத் தங்கப் பதக்கம்  அணிவிக்கப்பெற்று, கரந்தைக் கவியரசு எனும் சீர் மிகு பட்டம் வழங்கப் பெற்றது. 
       இந்நிலையில், வடநாடு சென்ற உமாமகேசுவரனார் உடல் நலக் குறைவு காரணமாக, அயோத்திக்கு அருகே அமைந்துள்ள பைசாபாத் என்னும் நகரில் உள்ள குறசி மருத்துவமனையில் 1941 ஆம் ஆண்டு இயற்கை யெய்தினார்.
சங்கமுதல்  வாயிலிலே  தளிராலின்  நிழலகத்தே  சார்ந்த  மன்றம்
அங்கங்காம்  அவற்றகத்தே  ஆற்றிடத்தே  அகல்வெளியாம்  ஆங்கே மற்றும்
எங்கணுநீ  நிற்கின்றாய்  இருக்கின்றாய் இயல்கின்றாய்  எளியேம்  பாலே
பொங்கினிய மொழிகின்றாய் பொற்புடைய தலைவஇவைபொய்யோ  மெய்யோ
என சங்க வளாகத்தில் காணும் இடங்களில் எல்லாம், காணும் பொருட்களில் எல்லாம், கேட்கும் ஒலிகளில் எல்லாம் தனது இன்னுயில் நண்பர் தமிழவேள் அவர்களையே கண்ட கவியரசர், தமிழவேள் தலைவராய் இனி அமராத இடத்தில், தான் மட்டும் செயலாளராய் பணிசெய்தல் தகுமோ என நெஞ்சம் கலங்கினார்.
      தமிழவேள் இல்லாத இடத்தில், ஒரு சாதாரணத் தொண்டனாய் தொண்டாற்றுதலே இனி யாம் செய்ய வேண்டியது என்று எண்ணிய கவியரசர் அவர்கள்,உமாமகேசுவரனார் மறைந்த சில நாட்களிலேயே தனது செயலாளர் பணியினைத் துறந்தார்.
      கவியரசர் அவர்கள் 1942 ஆம் ஆண்டு திருவையாற்று அரசர் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற நிலையில் உடன் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர், கவியரசரை நோக்கி இனி தாங்கள் எங்கு தங்க விருப்பம் என்று கேட்டார். அதற்குக் கவியரசர், யான் கரந்தையில் தங்க வேண்டும் என்னும் குறிப்புடனேயே, வெள்ளி விழாவில் தங்கப் பதக்கம் (தங்கப் பதக்கம் அதாவது தங்குவதற்காகப் பதக்கம்) அளித்துவிட்டு உமாமகேசுவரம் பிள்ளை சென்று விட்டார்கள் என்று தமிழவேளை நினைவு கூர்ந்து தழுதழுத்த குரலில் கூறினார்.
      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழாவின் போது 1938 ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் அவர்களால் கரந்தைப்  புலவர் கல்லூரி தொடங்கப் பெற்றது.இக் கல்லூரியானது நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு 1941 ஆம் ஆண்டு தான் சென்னைப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றது. 1942 இல் ஓய்வு பெற்ற கவியரசர் கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியில் சேர்ந்தார்.1942 முதல் 1945 ஆம் ஆண்டு வரை கரந்தைப் புலவர் கல்லூரியின் துணை முதல்வராகவும், 1946 முதல் 1948 வரை கல்லூரியின் பொறுப்பு முதல்வராகவும் சீரியப் பணியாற்றினார்.
    கவியரசரின் வளமான உடல்நிலையானது 1945 ஆம் ஆண்டில் தளர்ச்சியுறத் தொடங்கியது.ஏறு போல் வீறு நடை போடும் கவியரசரின் கால்கள் வலுவிழக்கத் தொடங்கின. தமிழ்ச் சிங்கத்தின் உடல், ஊன்று கோலை நாடியது.  கைகள் ஊன்று கோலைப் பற்றினாலும், மனமானது தமிழைப் பற்றியே இருந்தது. தன் உடல் நிலை காரணமாக 1946 ஆம் ஆண்டில் கல்லூரி முதல்வர் பொறுப்பினைத் துறந்தாலும், பேராசிரியராகத் தன் தமிழ்ப் பணியினைத் தொடர்ந்தார். 
    உடல் தளர்ந்திருந்த நிலையில், கவியரசரை வழியில் சந்தித்த நண்பர் ஒருவர், தங்களது சாகை எங்கே? (தங்களது வீடு எங்கே?) என்று கேட்க, கவியரசரோ சாதல் என்பதை உணர்த்தும் பொருளில் எனது சாகை கரந்தையிலேதான் என்று மறுமொழி கூறினார். தனது வாழ்வும் சாவும் உமாமகேசுவரனார் இருந்த கரந்தையிலேதான் என்பதில் கவியரசர் உறுதியாக இருந்தார்.
     நாளடைவில் கால்கள் மேலும் தளர்ச்சியுறவே, ஊன்று கோலைப் பயன்படுத்தியும் நடக்க இயலாத நிலை. உடல் தளர்ந்திருந்தாலும் உள்ளம் தளர்ந்தாரில்லை.  சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும், அதன் தமிழ்ச் சீற்றம் குறையவில்லை. தனது இறுதி மூச்சு உள்ளவரை, தனது பணி சங்கப் பணியே, தமிழவேள் பணியே, தமிழ்ப் பணியே என்பதைக் குறிக்கோளாகக் கொண்ட கவியரசர், சங்கத்திற்கு அருகிலேயே குடியேறினார். நாற்காலி ஒன்றில் நான்கு சக்கரங்களைப் பொறுத்தச் செய்து, சிறு தள்ளு வண்டி ஒன்றினை தயாரிக்கச் செய்தார் கவியரசர். ஏழ்மை நிலையில் இருந்த விஸ்னு எனும் மாணவனை தனது வீட்டிலேயே தங்க வைத்து ஆதரவளித்து வந்தார் கவியரசர். அம்மாணவன் தினமும்  கவியரசரை நாற்காலியில் அமர வைத்து சங்கத்திற்கு வண்டியைத் தள்ளிக் கொண்டே வருவான். கவியரசர் தள்ளு வண்டியை தனது வகுப்பின் நிலைக் கதவிற்கு அருகில் நிறுத்துமாறு செய்து, அங்கிருந்தவாறே மாணவர்களுக்குப் பாடம் நடத்துவார்.
   ஒரு நாள் கவியரசசின் தமையனார் வேலாயுதம் பிள்ளை அவர்கள், உடல் நலம் மிகவும் குன்றியிருந்த கவியரசரைப் பார்த்து, தாங்கள்  இனி மோகனூருக்கே வந்து விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  கவியரசர் பதில் கூறாமல் அமைதியாய் இருக்கவே, கவியரசரின் அருமை மகனார் சுப்பிரமணியம் அவர்கள், தனது சிற்றப்பாவைப் பார்த்து கரந்தைத் தமிழ்ச் சங்கம் மோகனூருக்கு வந்தால்தான், அப்பா அங்கு வருவார்கள் என்று பதில் கூறினாராம். 
   கவியரசர் கரந்தையைக் காதலித்தார். கவியரசு அவர்கள் தமிழ் மேல் கொண்ட பற்றினாலும், தமிழவேள் மேல் கொண்டபாசத்தினாலும், சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன் மேல் கொண்ட நட்பாலும், கரந்தையை விட்டு விலகாமல் தமிழ்ப் பணியாற்றி வந்தார்.
            பிணியினைப் பாராட்டும்  பெற்றியார்  யாரோ?
                       பிணியினால்  நீவருந்திப்  பேதுற்ற  போதும்
                       பிணியால்  வருநலங்கள்  பேசிப்பா  ராட்டிப்
                       பிணிப்பத்தும்  பாடினையே  பேர்த்து
கவியரசர் தன் உடல் மேலும் நலிவுற்ற நிலையிலும் கூட தமிழையே சுவாசித்தார். தன் உடல் நலம் குறைவுற்று படுக்கையில் கிடந்தபோதும் துன்பப் பத்து எனும் கவிதை நூலை இயற்றி தமிழன்னைக்கு அமுது படைத்தார்.
           சாகும்  போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்
                      எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்
என்ற ஈழக் கவி சச்சிதானந்தனின் பாடல் வரிகளுக்கேற்ப, தமிழுக்காக மட்டுமல்ல, நட்பிற்காகவும் வாழ்ந்த கவியரசர் அவர்கள்1953 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 16 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று, இம்மண்ணுலகு துறந்து, தேவருலகின் கவிச் சக்கரவத்த்தியானார்.
           தமிழ்மொழியும்  தமிழ்நாடும்  தக்காரும்  இருக்கும்வரை
                     தமிழ்த்தேனின்  சுவைமாந்தும்  மொழித்தொண்டர்  இருக்கும்வரை
                     தமிழர்தம்  அகவுணர்ச்சி  தலைநிமிர்ந்து  இருக்கும்வரை
                     தமிழ்ப்புலவர்  கவித்தலைவர்  கரந்தைக்கவியரசர்  புகழ்வாழும்.

சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன், தமிழவேள் உமாமகேசுவரனார் ஆகியோர் மேல் கொண்ட நேசத்தால், நட்பால், பாசத்தால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை விட்டு அசையாது, அகலாது, தனது இறுதி மூச்சு உள்ளவரை நேசம் பாராட்டிய கவியரசரைப் போன்ற, நேசர் ஒருவரை நாம் காணும் நாள் எந்நாளோ?
கரந்தைக் கவியரசரின் புகழ்பாடுவோம்
நட்பின் பெருமையினைப் பறைசாற்றுவோம்.
    
    









மீட்பர்


ஆண்டு 1925. அந்தக் குடும்பமும், அக்குடும்பத்தின் உற்றார் உறவினர்களும், அந்தக் கோயிலில் கூடியிருந்தனர். திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும், அந்தத் தம்பதியினருக்குக் குழந்தை இல்லை. எனவே இறைவனை வேண்டிக் கொண்டனர். இறைவனே, எங்களுக்குக் குழந்தை பாக்கியத்தை அருளுங்கள். எங்கள் குலம் தழைக்கக் கருணை காட்டுங்கள். முதல் குழந்தை பிறந்து, அதுவும் பெண்ணாகப் பிறந்தால், அக்குழந்தையை உனக்கே அர்ப்பணிக்கிறோம். இறைவா, எங்களுக்குக் குழந்தை கொடு.

     அத்தம்பதியினருக்கு முதல் குழந்தையாய் ஒரு பெண் குழந்தை. அடுத்த ஆண்டே அடுத்த குழந்தை. ஆண்டுகள் பல கடந்த நிலையில், தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, பருவமெய்திய, தங்களது மகளை, கோயிலுக்கே அர்ப்பணிக்க வந்திருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்தக் கூட்டம்.

     மேள தாளங்கள் முழங்க, அக்கோயில் பூசாரி, அப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறார். பூசாரி கட்டினால் கடவுளே கட்டியதாக அர்த்தம். இதன் பெயர்தான் பொட்டு கட்டுதல்.
    

நண்பர்களே, இனி இப்பெண் கோயிலுக்குச் சொந்தம். கோயிலுக்கு மட்டுமல்ல, கோயில் நிர்வாகிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் சொந்தம்.

     பகலில் பூசை நேரங்களில் இறைவனுக்கு முன் இவர்கள் நாட்டியமாடுவார்கள். இரவிலோ வசதி படைத்தவர்களின் விளையாட்டுப் பொம்மைகள் இவர்கள். இவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கும், ஆனால் தந்தை யாரென்று தாய்க்குக் கூடத்தெரியாது. இறைவனின் குழந்தைகள்.

      இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெண்ணாகப் பிறந்தால், அவர்களும் தாயின் வழியில்தான் வாழ்ந்தாக வேண்டும். இவர்கள்தான் தேவதாசிகள். இவர்கள் ஒருபோதும் விதவையாக மாட்டார்கள். இவர்கள் நித்ய சுமங்கலிகள்.

     இறைவனின் பெயரால் இந்த இழிநிலை. பெற்றோர்களின் அறியாமையினால், கல்வி கற்காமையினால், கோழி, ஆடு, மாடுகளைப் போல், பெண்கள் நேர்ந்துவிடப் படுவதும், செல்வந்தர்களின் போகப் பொருளாய் மாறி, இவர்கள் தவித்த தவிப்பும், அனுபவித்த கொடுமையும், பல நூறு ஆண்டுகளாய், நமது புண்ணிய பூமியில், தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. மீட்பர் ஒருவர் வரும்வரை. ஒரு பெண் மீட்பர்.

     சென்னை மாகாண சட்டசபையின் மேலவைத் துணைத் தலைவரான, அப்பெண் மீட்பர், 1927 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள், தேவதாசி முறை ஒழிப்பிற்கான தீர்மாணத்தை முன் மொழிந்தார்.

      அறிவு ஜீவிகள் கொதித்து எழுந்தனர். நாட்டியக் கலையே அழிந்து போகும் அபாயம் வந்து விட்டது. கலை காப்பாற்றப்பட வேண்டாமா? இந்த அநீதியைத் தடுப்பார் யாருமில்லையா? இறைவன் முன் நடைபெறும் நாட்டியம் நின்றால், இறைவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்துவிட மாட்டானா? என பலவாறு பிதற்றினர்.

     பெண்களை இழிவு படுத்தித்தான், அவர்களின் பெண்மையைச் சுறையாடித்தான், பரத நாட்டியக் கலையை வளர்க்க வேண்டும் என்றால், காப்பாற்ற வேண்டும் என்றால், அந்தக் கலையே தேவையில்லை என முழங்கினார் அம்மீட்பர்.

     மீட்பருக்கு ஆதரவாக மகாத்மா காந்தி குரல் கொடுத்தார். பெரியாரோ பொங்கி எழுந்தார். தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை எதிர்ப்போரைப் பார்த்து சவால் விட்டார், தேவதாசி முறை தொடர வேண்டும் என்று, கொந்தளிக்கிறீர்களே, கொக்கரிக்கிறீர்களே, உங்கள் வீட்டுப் பெண்களைப் பொட்டுக் கட்டி அனுப்பத் தயாரா?

     ஒரு நாளா, இரண்டு நாளா, இரண்டு ஆண்டுகாலப் போராட்டம். மீட்பரின் அயரா உழைப்பு, தளராத போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றே விட்டது. 1929 ஆம் ஆண்ட பிப்ரவரி மாதத்தில், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது.

      இன்று நம் குடும்பப் பெண்கள், கோயிலுக்கு நேர்ந்துவிடப் படாமல், செல்வந்தர்களின் படுக்கை அறையை அலங்கரிக்காமல், ஆசிரியைகளாய், பொறியாளர்களாய், மருத்துவர்களாய், விஞ்ஞானிகளாய், விண்வெளி வீரர்களாய் உலகை வலம் வருகிறார்களே, இதற்குக் காரணம் அம் மீட்பரல்லவா?

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

என்று பாரதி பாடுவாரே, அந்தப் புதுமைப் பெண் அல்லவா இவர். அவர்தான்
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி.
    

 புதுக்கோட்டை மாநகர் ஈன்றெடுத்த புரட்சிப் பெண் இவர். 1885 ஆம் ஆண்டு ஜுலை 30 இல் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி. வீட்டில் இருந்தபடியே பதினோராம் வகுப்பு.

     புதுக்கோட்டை அரசினர் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதல் பெண் இவர். 1907 இல் சென்னை மருந்துவக் கல்லூரியில் நுழைந்து, 1912 இல் மருத்துவராய் வெளிவந்தவர் இவர்.

இந்தியாவிலேயே டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி.

     டாக்டர் சுந்தர ரெட்டி என்பாரை மணந்ததால் முத்துலட்சுமி ரெட்டி ஆனார்.
     

நண்பர்களே, பெண் குழந்தைகளுக்கு எட்டு வயதிலேயே திருமணம். பத்து வயதிலேயே விதவைக் கோலம். பருவம் எய்தும் முன்னரே, மொட்டுக்கள் கருகும் பரிதாப நிலை. இதுதான் அன்றைய நிலை. சட்டசபையில் சாரதா சட்டத்தை முன்மொழிந்து, பெண்களைக் குழந்தைத் திருமணம் என்னும் கொடுமையில் இருந்து, காப்பாற்றியவரும் இந்த முத்துலட்சுமி அவர்கள்தான்.

     அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஆதரவற்ற பெண்களுக்கான அவ்வை இல்லம், குழந்தைகள் பாதுகாப்பு இல்லம், இவையெல்லாம் முத்துலட்சமி ரெட்டியின் அயரா உழைப்பால் உதயம் கண்டவையாகும்.

     நண்பர்களே, முத்துலட்சுமி அம்மையார்ரின் முயற்சியால் உருவான குழந்தைகள் பாதுகாப்பு இல்லம்தான், இன்று உருமாறி, குற்றம் புரிந்த சிறுவர்கள், எதிர்காலத்தல் திருந்தி வாழ வழி செய்யும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளாகக் காட்சியளிக்கின்றன.

     மகாத்மா காந்தி அவர்கள், ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, சற்றும் தயங்காமல், மேலவைத் துணைத் தலைவர் பதவியை உதறித் தள்ளிய வீரப் பெண்மணி முத்துலட்சுமி ரெட்டி.

     நம் குலப் பெண்களை, சகோதரிகளை மொபெரும் இழி நிலையில் இருந்து மீட்ட, காத்த முத்துலட்சுமி அம்மையார், கண்மூடி ஓய்வெடுக்கத் தொடங்கிய நாள் இன்று.

ஜுலை 22, 1968.

போற்றி போற்றிஓர் ஆயிரம் போற்றி, நின்
பொன்ன டிக்குபல் லாயிரம் போற்றிகாண்.
சேற்றி லேபுதி தாக முளைத்ததோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை மாதரசே எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ.

                               - மகாகவி பாரதி

Friday, August 29, 2014

நட்பின் முகவரி

           இன்னிசைத்தேர்  யாழ்நூ  லிசைபரப்பி  னான்புலமை
                             மன்னுவிபு  லாநந்த  மாமுனிவன்  -  தொன்மைத்
                             தமிழ்ப்புலமை  மல்கத்  தமிழ்வளர்த்து  வாழ்க
                             இமிழ்கடல்சூழ்  ஞாலத்  தினிது
-          நீ.கந்தசாமி

     நட்பு

     நட்பு என்ற இந்த மூன்றெழுத்து வார்த்தையில்தான் எவ்வளவு அழகு, எவ்வளவு கம்பீரம், எவ்வளவு வசீகரம்.

     நட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டிய சான்றோர் பலரைப் பற்றிப் படித்துப் பரவசப்பட்டிருக்கிறோம். ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமலேயே, பண்பார்ந்த செயல்களால் அறிந்து, உணர்ந்து நட்புப் பாராட்டி, இறப்பில் ஒன்றிணைந்த, கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்புப் பற்றிப் படித்து மெய்சிலிர்த்திருக்கிறோம்.

     இவர்களின் நட்பிற்குச் சிறிதும் குறையாது, பல்லாயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடந்த பழந்தமிழிசைப் பரப்பின் எல்லை கண்டு, யாழ்நூல் என்னும் இசைத் தமிழ் நூலினை இயற்றி, நட்பிற்குக் காணிக்கையாக்கிய, அற்புத நிகழ்வினை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
   

ஆறுமுக நாவலர் போன்று, ஈழநாட்டில் பிறந்து, இலங்கையிலும், தமிழகத்திலும், தமிழ் வளர்த்த பெருமகனார் விபுலாநந்த அடிகள் ஆவார். இவரது இயற்பெயர் மயில்வாகனன் என்பதாகும்.

     இராமகிருட்டிணச் சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட காரணத்தால், அம் மடத்தின் தொண்டருள் ஒருவராய் மாறி, தனது பெயரினை விபுலாநந்த அடிகள் என்னும் துறவு நிலைப் பெயராக மாற்றிக் கொண்ட மாமனிதர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராய் அமர்ந்து, அரும் பணிகள் பல ஆற்றிய தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களிடம் அளவிலா நட்பு கொண்டவர்.

     1933 ஆம் ஆண்டு நடைபெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 22 ஆம் ஆண்டு, ஆண்டு விழாவின் தலைவர் விபுலாநந்த அடிகளேயாவார்.

     விபுலாநந்த அடிகள் அவர்கள் 1936 ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பழந்தமிழரின் இசை, ஓவியம், கலையறிவு என்னும் பொருள் பற்றி பல சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பண்டைத் தமிழ் மக்கள் இசைத்ததும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, மறைந்து போனதுமாகிய யாழின் உருவத்தினை, சங்க இலக்கிய சான்று கொண்டு ஓவிய வடிவில் முதன் முதலில் வெளிப்படுத்தினார்.

     1937 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் அவர்கள் திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்டார். திருக்கயிலாய யாத்திரையினை நிறைவு செய்து திரும்பும் வழியில், சில காலம் விபுலாநந்த அடிகள் அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தங்கினார்.

     உமாமகேசுவரனாரின் உயரிய குணமும், விருந்தோம்புதல் பண்பும், தணியாத் தமிழ்த் தாகமும், விபுலாநந்தரை நெகிழச் செய்தன. இதனால் விபுலாநந்தர் உமாமகேசுவரனார் மீது கொண்டிருந்த நட்பானது, மேலும் வளர்ந்து, இருவரும் உடன் பிறவாச் சகோதரர்களானார்கள்.

     இந்நிலையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார் அவர்கள் விபுலாநந்த அடிகளிடம், அவரது இசைத் தமிழ் ஆராய்ச்சியினை, ஒரு நூலாக எழுதித் தருமாறு அன்புடன் வேண்டினார். இதன் காரணமாக அடிகளார் அவர்களும், இசைத் தமிழ் பற்றிய தனது கருத்துக்களை, ஆராய்ச்சி முடிவுகளைக் கட்டுரைகளாக எழுதி, தமிழ்ப் பொழில் இதழில் வெளியிடுவதற்கு அனுப்பத் தொடங்கினார்.

     1941 ஆம் ஆண்டு வடநாட்டு யாத்திரை மேற்கொண்ட உமாமகேசுவரனார் அவர்கள், தமிழ்நாடு மீளாமலேயே, இறைவன் திருவடியை அடைந்தார்கள்.


       உற்றாரை  யான்வேண்டேன்  ஊருடன்  பேர் வேண்டேன்
எனக் கூறுதற்கு உரிய நிலையினை ஆண்டவன் அருளினால் ஓரளவிற்கு எய்தினேன் எனினும்,
       கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனியமையும்
எனக்கூறும் உள்ளத் துணிவினை யான் எய்தவில்லை. பண்டைக்குலத் தொடர்பினை நீத்தேனாகிய யான், தமிழ்த் தெய்வத்திற்கு ஆட்பட்டு, அன்னைத் தமிழ்ப் பணி செய்யும் அன்பர் குழாமாகிய தொண்டர் குலத்திற்கு உரியவனாகையினால், தமிழ்ப்  புலவர் பிரிவு ஆறத் துயரினை அளிக்கின்றது.
                           முத்தமிழ் நூல் கற்றார் பிரிவும், கல்லாதாரிணக்கமுங்
                           கைப்பொருளொன்  றற்றாரிளமையும் போலக்
                           கொதிக்கும் அருஞ்சுரம்
என ஔவை கூறிய பிரிவு என்னும் பாலையுட்பட்டு துன்புறுகின்றேன்.

     செந்தமிழ்ப் புரவலரும், தமிழவேளும் கண்போல் நண்பருமாகிய உமாமகேசுவரனாரது பொன்னுடலம் திருவயோத்தி நகரிலே சரயு நதிக்கரையிலே தீக்கு இரையாயிற்று என்னுஞ் செய்தி துயரின்மேற் றுயராயிற்று.

     இமயம் நோக்கிச் சென்று, திரும்பும் வழியில் தஞ்சையிலே கரந்தைத் தமிழ்ச் சங்கத்து, ஆண்டுவிழாவிலே, வாழ்த்துரை கூறி விடையளித்துப் பிரியாது பிரிந்த செந்தமிழ்ப் புரவலர், இத்துணை விரைவிலே மண்ணுலகை நீத்து வானவர்க்கு விருந்தாவாரெனக் கனவிலும் நினைத்தேனல்லேன். நமது புரவலரது தகுதியினை ஓராது,
             நினையாக்  கூற்றம்  இன்னுயிருய்த்தன்று
             பைதலொக்கற்ற  ழீஇ யதனை
             வைகம்  வம்மோ வாய்மொழிப் புலவீர்
எனப் புலவர் குழாத்தை விளித்தக் கூறுவதொன் றன்றி வேறு செய்வதறியாது திகைப்புறுகின்றேன், எனப் பலவாறு வருந்திய விபுலாநந்தருக்கு, உமாமகேசுவரனாரின் அன்பு வேண்டுகோள் நினைவிற்கு வந்தது.
 
     இசைத் தமிழ் ஆராய்ச்சிகளை ஒரு நூலாக எழுதித் தருமாறு நண்பர் உமாமகேசுவரனார் வேண்டினாரே? நாம் சில கட்டுரைகளை மட்டும்தானே எழுதிக் கொடுத்தோம். உமாமகேசுவரனாரின் பிரிவுத் துயரினைப் போக்க, யான் செய்ய வேண்டியது, இசைத் தமிழ் ஆராய்ச்சியை நூல் வடிவில் எழுதி, உமாமகேசுவரனார் தன் உயிரினும் மேலாய் போற்றி வளர்த்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்குவதுதான் என்று முடிவு செய்தார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலேயே தங்கி இப்பணியினைச் செய்வது என்றும் முடிவு செய்து கரந்தை நோக்கிப் புறப்பட்டார்.

     கரந்தைத் தமிழ்ப் பெருமன்றத்தின் நுழைவு வாயிலின் வலப்புறம் உள்ள அறை, விபுலாநந்தருக்காக ஒதுக்கப்பெற்றது. விபுலாநந்த அடிகளார்க்கு வேண்டும் வசதிகளை அன்புடன் செய்தளித்த, சங்கப் பேரன்பர் அ.கணபதியா பிள்ளை அவர்கள், அடிகளாருக்கு உடனிருந்து தொண்டாற்றும்படி, கரந்தைப் புலவர் கல்லூரி விரிவுரையாளர் பேராசிரியர் க.வெள்ளைவாரணன் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

     கணபதியா பிள்ளையின் வேண்டுகோளைப் பெரும்பேறாக எண்ணிய வெள்ளைவாரணன் அவர்களும், விபுலாநந்த அடிகளார்க்கு வேண்டும் உதவிகளை உடனிருந்து செய்யத் தொடங்கினார். யாழ்நூல் என்னும் பெயரில் தனது இசைத் தமிழ் ஆராய்ச்சிகளை நூல் வடிவில் எழுத எண்ணிய அடிகளார், தமது நூலின் அமைப்பு குறித்து, வெள்ளைவாரணன் அவர்களிடம் அடிக்கடி எடுத்துரைப்பார்கள். இசை நூலில் அமைவதற்குரிய தெய்வ வணக்கப் பாடலாக, காத்தற் கடவுளாகிய திருமாலின் வணக்கமே முதலிடம் பெறும் என அடிகளார் தெரிவித்தார்.இதனைக் கேட்ட வெள்ளைவாரணன் அவர்கள், எல்லா இடர்களையும் நீக்கி அருளும் மூத்த பிள்ளையார்க்கு உரிய வணக்கமே முதலில் அமைதல் வேண்டும் என அடிகளாரை வேண்டினார். அதற்கு அடிகளார், தம்பி, நீ பிற்கால வழக்கத்தை நினைத்துக் கூறுகின்றாய், நீ விரும்பியபடி மூத்த பிள்ளையாருக்கும் வணக்கம் சொல்வேன். ஆனால் அது திருமாலின் வணக்கத்திற்குப் பின்னரே அமையும் என்று உறுதியாகத் தெரிவித்தார்.

     அன்றிறவு வீட்டிற்குத் திரும்பிய வெள்ளைவாரணன் அவர்கள், வழக்கம் போல் மாறுநாள், அதிகாலையில் அடிகளாரைக் காணச் சென்றார். வெள்ளைவாரணன் அவர்களைக் கண்ட அடிகளார், தம்பி, நீ சொல்லியபடியே மூத்த பிள்ளையாருக்கு முதலில் வணக்கச் செய்யுளைப் பாடியிருக்கின்றேன், அவர் என்னைக் கீழ விழ வைத்து வேடிக்கைப் பார்த்துவிட்டார் எனறு கூறி, யார் நூலின் தெய்வ வணக்கப் பாடலாகத் தான் இயற்றிய,

   உழையிசை  இபமென  உரவுகொள்  பரனை  உமைதிரு உளநிறை அமிழ்துரு மழலை
   மொழியுறு  குழவியை  ஆழகறி  விளமை  மழுதியல்  வரதனை  முறைமுறை  பணிவாம்
   புழைசெறி  கழைகுழ  விசைமொழி  பொதியப்  புகழுறு  வளருறு  புலமள்  பணுவல்
   இழையணி  தமிழ்மகள்  எமதுளம்  உறையும்  இறைமகள்  இசையியல்  உளமுறு  கெனவே

என்னும் பாடலை ஆர்வமுடன் படித்துக் காட்டினார்.இப்பாடலினைக் கேட்டு மகிழ்ந்த வெள்ளைவாரணன் அவர்கள், அடிகளாரைப் பார்த்துப் பிள்ளையார் செய்த வேடிக்கை யாது என அறியும் குறிப்புடன் நின்றார். இரண்டு மாதங்களாகக் கரந்தைத் தமிழ்ப் பெருமன்றத்தின் வாயிலில் அமைந்த அறையில் தங்கியிருக்கும் நான், என்றும் போல, விடியற்காலம் நாலு மணியளவில், வடவாற்றுப் பக்கம் சென்று திரும்பும் பொழுது, அரச மரத்தடியில் அமர்ந்துள்ள மூத்த பிள்ளையாருக்கு முன்புறம் உள்ள மின் விளக்குக் கம்பத்தின் கம்பி தடுக்கி கீழே விழ இருந்தேன். எனது இரு கைகளையும் ஊன்றிக் கீழே விழாமல் தப்பித்தேன். எனது இருகைகளையும், மூத்த பிள்ளையாரின் திருவடிகளில் ஊன்றிக் கீழே விழாது உய்த்த திறத்தைப் பின்னரே உணர்ந்தேன்.  திருமாலுக்கு வணக்கம் சொல்லிய பிறகுதான், மூத்த பிள்ளையாருக்கு வணக்கம் சொல்லுவேன் என்று கூறிய மறுநாளே, முத்த பிள்ளையார் என்னைத் தன் திருவடிகளில் விழுந்து வணங்கச் செய்துவிட்டார். பிள்ளையார் அருளால் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி யாழ் நூலின் தொடக்கமாய் அமைந்தது எனக்கு மன மகிழ்வைத் தருகின்றது எனறு கூறி கம்பி தடுத்தமையால் தனது காலில் ஏற்பட்ட உராய்வினையும் அடிகளார் காட்டினார்.

     இவ்வாறு கரந்தைத் தமிழ்ச் சங்க அரசமரத்தடியில் அமர்ந்திருந்த மூத்த பிள்ளையார் வணக்கத்துடன் தொடங்கப் பெற்ற யாழ்நூலினை, விபுலாநந்த அடிகள் அவர்கள் 1943 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் எழுதி முடித்தார்.

    யாழ்நூலின் முகவுரையில் விபுலாநந்தர் பின்வருமாறு எழுதுகிறார்.

    என்னை இப்பணியில் பெரிதும் ஊக்கிய கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் திரு த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் இதன் நிறைவு பேற்றினைக் காணுமுன் பிரிந்து சென்றமையினை நினைக்கும்போது, என்னுள்ளம் பெரிதும் துயருறுகின்றது. அவர்களது அன்புக்குரிய நிலையமாகிய இத் தமிழ்ப் பெரு மன்றத்திலும், இதனைச் சார்ந்திருக்கும் அகத்தியர் திருமடத்திலும் இருந்து இந்நூலினை எழுதி முடித்தமை அவர்களது பிரிவினாலெய்திய மனத்துயரினை ஓரளவிற்கு நீக்கிவிட்டது.
    


ஆயிரம் ஆண்டுகளாக வழக்கற்று மறைந்த இசைத் தமிழாகிய அருங்கலை நிதியத்தின் பெருமையினை, இனிது புலப்படுத்தும் யாழ்நூல், 1947 ஆம் ஆண்டு சூன் திங்கள் ஐந்தாம் நாள் திருக்கொள்ளம் புதூர் திருக்கோயில் ஆளுடைய பிள்ளையார் திருமுன் , கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடாக, அரங்கேறியது.

                 சேர  மானும்  சுந்தரரும்
                 சிறந்த  சோழன்  பிரிராந்தை
                 ஏர்கொள்  வாரும்  தமக்கெவரும்
                 இணையில்  புலவர்  கபிலரொட
                 பாரி  வேளும்  என்னுமிவர்
                 பண்டு  கொண்ட,  நட்புரிமை
                 நேரும்  திறத்தான்  எல்லோர்க்கும்
                 நேர்தல் இயலும்  நிலைமையதோ?
                                             -பண்டித ந.ரா.சுந்தரராசன்

என்று நட்பின் பெருமையினைப் பற்றிப் புலவர் பாடுவர். இவர்களின் நட்பிற்குத் தங்களின் நட்பு சிறிதும் குறைந்ததல்ல என் முரசறைவதைப் போல், தமிழவேளின் பிரிவுத் துயரைத் தாங்க இயலாமல், தமிழவேளின் அன்பு வேண்டுகோளினை நிறைவேற்றுவதற்காக மட்டுமே, இப்புவியில தங்கியிருந்ததைப் போன்று, விபுலாநந்தரின் ஆன்மாவானது, யாழ்நூல் அரங்கேற்றம் கண்ட 44 ஆம் நாள், 1947 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 20 ஆம் நாள், மண்ணுலகிலிருந்து புறப்பட்டு, தனது  நண்பர் உமாமகேசுவரனாரைத் தேடி விண்னுலகு பயணித்தது.
                                  ஏழிசை  நூற்  றிறங்கண்டீர்   யாழியலை
                      வகுத்தருள்மின்  என்ன முன்னம்
              ஆழியஅன்  பினற்றமிழ  வேள்  புகல
                      அதற்கிசைந்தே  அவன்காண்  சங்கச்
              சூழலிலே  யாழ்நூலைத்  தொடங்கியநின்
                      அன்புரிமைத்  தொடர்பை  யாண்டு
              வாழுமவற்  குரைத்திடவோ  வளர்கயிலை
                       யடைந்தனைநீ  வகுப்பா  யண்ணால்

-          க.வெள்ளைவாரணன்


விபுலாநந்தர் உமாமகேசுவரனார் நட்பினைப் போற்றுவோம்.