ஆண்டு 1891.
கொடைக்கானல் குன்று. அவர் ஒரு ஆங்கிலேயர். வயதோ 77. நடைப் பயிற்சி முடிந்து,
தற்காலிகமாகத் தங்கியிருந்த வீட்டிற்குத் திரும்பியபோது, அவரின் உடல் நடுங்கத்
தொடங்கியது. மருத்துவர் வரவழைக்கப் பட்டார். மருத்துவம் பார்த்தும் பலன்தானில்லை.
கருணைக் கடலாம் கர்த்தரை மனதில் நினைத்து,
மறை மொழிகளால் மனதாரத் தொழுது, புண்ணியா, உன்னிடமே போதுகின்றேன்
என்றார். அடுத்த நொடி, அவரது மண்ணுலக வாழ்வு நிறைவு பெற்றது.
அந்நாள் 28.8.1891
அவரது மனைவிக்கும், மகனுக்கும் என்ன
செய்வதென்றே தெரியவில்லை. கொடைக் கானல் குன்றிலிருந்து, பெரியவரின் உடலினை எப்படி
அடிவாரத்திற்குக் கொண்டு செல்வது என்று அறியாது திகைத்தனர்.
நண்பர்களே, இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு
முன்னர், கொடைக்கானல் குன்றுக்கு, இன்றுள்ளது போன்ற சாலை வசதிகள் ஏதும் கிடையாது.
அம்மை நாயக்கனூர் என்னும் ஊரிலிருந்து, கடும் பாறையின் வழியே
பயணித்தாக வேண்டும். செங்குத்தாக சிவந்த பாறைகளுக்கு இடையே, நெளிந்து நெளிந்து
செல்லும் பாதையில், தட்டுத் தடுமாறி நடந்தே ஏறித்தான் கொடைக் கானலை அடைய முடியும்.
நடப்பதற்கே கடினமான பாறை வழியாக, மறைந்த
பெரியவரைப் பேழையில் வைத்து, பத்திரமாய் மலையின் அடிவாரத்திற்குக் கொண்டு வந்தாக
வேண்டும். இப்பணி எப்படி சாத்தியமாகும் என்று எண்ணி எண்ணி கலங்கித்தான் போனார்கள்.
மறைந்த அப்பெரியவரின் பெருமை அறிந்த மலை
வாழ் மக்கள் பலர் ஒன்று திரண்டு வந்தனர், தாயே, அருந்தவ முனிவராம், இப்பெரியவரை
சுமந்து செல்லும் பெருமையை, ஏழைகளாகிய எங்களுக்கு அருள வேண்டும் என்று கூறி,
குழந்தையைப் போல், பேழையைத் தோளில் சுமந்து, நடக்கத் தொடங்கினர். மலையில் இருந்து
இறங்கத் தொடங்கினர்.
அலுங்காமல், குலுங்காமல் பேழையைச் சுமந்து,
மலை அடிவாரத்தை வந்தடைந்தனர். பின்னர் ஒரு மாட்டு வண்டியில், பேழையை ஏற்றி, தொடர்
வண்டி நிலையத்தை அடைந்தனர்.
தொடர் வண்டியில் நெல்லை மாநகர் வரை பேழை
பயணித்தது. பின்னர் பாளையங்கோட்டை தேவாலயத்தில் பேழை சிறிது ஓய்வெடுத்தது. அன்றிரவு
முழுவதும், பாளையங் கோட்டை மக்கள், தொடர்ந்து வந்து, பேழையில் உறங்கும், பெரியவரை
வணங்கிய வண்ணம் இருந்தனர்.
சாலையின் இருமருங்கிலும், ஆங்காங்கு,
ஆயிரக் கணக்கானப் பொது மக்கள் நின்று வணங்க, அடுத்த நாள், அப்பேழை, இடையான்குடி
நோக்கித் தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கியது.
ஒன்றல்ல, இரண்டல்ல முப்பத்து மூன்று
ஆண்டுகள், தான் பார்த்துப் பார்த்து, இழைத்து இழைத்து உருவாக்கிய, இடையான்குடி
தேவாலயத்திலேயே, அப்பெரியவரின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.
நண்பர்களே,
இப்பெரியவர் யார் தெரிகிறதா?
இவர்தான்,
தமிழ் மொழியின் பெருமையினை,
இவ்வுலகிற்கு
அறிவித்த அருமைமிகு ஆங்கிலேயர்
அறிஞர்
ராபர்ட் கால் டுவெல்.
அயர்லாந்து தேசத்தில் பிறந்த கால்டு வெல், கடல் வழியாக சென்னையில் கால் பதித்த
நாள் 8.1.1838. அப்பொழுது அவரின் வயது வெறும் 24. மூன்றாண்டுகள் சென்னையிலேயே
தங்கி, அருந் தமிழின் சுவை அறிந்த அறிஞர்களிடம்,
தமிழமுதை அள்ளி அள்ளிப் பருகினார்.
ஒரு நாள், தனக்கு வேண்டிய உடைகளை, தேவையானப்
பொருட்களை எல்லாம், மூட்டையாய் கட்டி, கூலியாட்களின் தலையில் ஏற்றிவிட்டு, நடக்கத்
தொடங்கினார்.
நடந்தார், நடந்தார், நடந்து கொண்டே
இருந்தார். காலையில் நடந்தார். மாலையில் நடந்தார். வெப்பம் மிகுந்த பிற்பகலில்,
மரங்கள் அடந்த தோட்டங்களில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு நடந்தார். தமிழகத்தையும்,
தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும், பழக்க வழக்கங்களையும், அணு
அணுவாய் அறிந்து கொண்டு, புரிந்து கொண்டு நடந்தார்.
தில்லை சிற்றம்பலத்தின் பழமையினையும் பெருமையினையும் கண்டு மகிழ்ந்து,
மாயூரம் வந்தார். தரங்கம்பாடியில் சில காலம் தங்கினார். பின் நடந்து கும்பகோணம்
வழியாகத் தஞ்சையை வந்தடைந்தார்.
தஞ்சையில் வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு
அளவாவினார். திருச்சி வழியாக நீலகிரி மலைக்குச் சென்றார். நீலகிரியில் சில நாள்
ஓய்வு. பின் நீலகிரியில் இருந்து புறப்பட்டு, கோவை வழியாக மதுரை மாநகரை
வந்தடைந்தார். மதுரையிலிருந்து, திருமங்கலம் வழியாக, திருநெல்வேலி சென்று,
பாளையங்கோட்டையில் ஓய்வெடுத்து, இடையான் குடியைச் சென்றடைந்தார்.
இடையான் குடியே இவரது இருப்பிடமாய் மாறிப்
போனது. ஊற்று நீரைத் தவிர, வேற்று நீரைக் கண்டறியாத, இடையான் குடியில், ஊர் தோறும்
பரந்து, படர்ந்து கிடந்த, கள்ளிச் செடிகளையும, முள்ளிச் செடிகளையும் அகற்றி,
தெருக்களைத் திருத்தி அமைத்தார். ஒவ்வொரு தெருவிற்கும், ஒரு கிணறு தோண்டினார்.
சாலையின் இருமருங்கிலும், நிழல்தரும் மரங்களை நட்டார்.
எண்ணும் எழுத்தும் அறியாதிருந்த அவ்வூர்
சிறுவர், சிறுமியருக்கு எழுத்தறிவு புகட்டினார். பெண் மக்கள் கல்வி கற்றல்
பெருந்தவறு, என்று எண்ணியிருந்த, அவ்வூர் முதியோர்களை அன்புடன் அழைத்துக் கனிவுடன்
பேசி, கல்வியின் இன்றியமையாமையை விளக்கி, பெண் கல்விக்கும் வித்திட்டப் பெருமைமிகு
பெருந்தகை இவர்.
தமிழ் மொழியில் உள்ள நூல்களை முழுமையாகக்
கற்றுத் தேர்ந்தார்.
பழந் தமிழ்ச் சொற்களைப் பழங் கன்னடச்
சொற்களோடும், ஆதி ஆந்திரச் சொற்களோடும் ஒத்து நோக்கிய போதுதான், இவருக்குப்
புரிந்தது, நூற்றுக் கணக்கான, சொற்களின் தாதுக்கள், மும்மொழிகளிலும் ஒன்று
பட்டிருப்பது தெரிந்தது.
மேலை நாட்டு மொழி நூல்களில் கண்ட, தெளிவான
ஆராய்ச்சி முற்களைப் பின்பற்றி, தென்னிந்திய மொழிகளை துருவித் துருவி ஆராயத்
தொடங்கினார்.
சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய்,
அதுவே உயர்ந்த மொழி என்று, அந்நாள் வரை, நிலை நாட்டப் பட்டிருந்த, எண்ணத்தை
உடைத்து, தூள் தூளாக்கி, தமிழே தென்னிந்திய மொழிகளின் தாய். அழகும், வளமும்
நிறைந்து, தனித்தியங்கும் வல்லமை பெற்ற
செம்மொழி தமிழ் என்பதை, தக்க சான்றுகளுடன் ஆணித்தரமாக நிலை நாட்டினார்.
திராவிடக் குடும்பத்தில் தொன்மையும்,
செம்மையும் வாய்ந்து விளங்கும் மொழி தமிழ் மொழியே என்பதையும் நிரூபித்தார்.
நண்பர்களே, கால்டுவெல், வியந்து வியந்து,
வியப்பின் உச்சிக்கே சென்று, பாராட்டிய செய்தி ஒன்றுண்டு தெரியுமா?
உலகில் வேறு எந்த மொழி நூல்களிலும்
காணப்படாத வகையில், பெயர்களை உயர்திணை என்றும், அஃறிணை என்றும், திராவிட இலக்கண
நூலோர் வகுத்திருந்த செவ்வியல் முறை கண்டு மயங்கித்தான் போனார்.
நான் அயர்லாந்து தேசத்தில் பிறந்தேன்.
ஸ்காட்லாண்டு தேசத்தில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன். ஆயினும் என் வாழ்
நாளில், ஐம்பதாண்டுகட்கு மேலாகப் பாரதப் பெரு நாடும், அந்நாட்டு மக்களுமே, என்
கருத்தை முற்றுங் கவர்ந்து கொண்டமையால், யான் இந்தியர்களுள் ஒருவனாயினேன்
என்று
நெகிழ்ந்து கூறி, மகிழ்ந்த
அறிஞர்
ராபர்ட் கால்டுவெல்
அவர்களின்
நினைவு
நாள்
இன்று
28.8.2014
தமிழின்
பெருமையை, தமிழ் இலக்கியங்களின் வளமையை,
தமிழனுக்கும்,
உலகிற்கும் உணர்த்திய
அறிஞர்
ராபர்ட் கால்டுவெல்
அவர்கள்
பிறந்த
200
வது ஆண்டு இவ்வாண்டு.
அறிஞர்
கால்டுவெல் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்.
No comments:
Post a Comment