ஆண்டு 1925.
அந்தக் குடும்பமும், அக்குடும்பத்தின் உற்றார் உறவினர்களும், அந்தக் கோயிலில்
கூடியிருந்தனர். திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும், அந்தத் தம்பதியினருக்குக்
குழந்தை இல்லை. எனவே இறைவனை வேண்டிக் கொண்டனர். இறைவனே, எங்களுக்குக் குழந்தை
பாக்கியத்தை அருளுங்கள். எங்கள் குலம் தழைக்கக் கருணை காட்டுங்கள். முதல் குழந்தை
பிறந்து, அதுவும் பெண்ணாகப் பிறந்தால், அக்குழந்தையை உனக்கே அர்ப்பணிக்கிறோம்.
இறைவா, எங்களுக்குக் குழந்தை கொடு.
அத்தம்பதியினருக்கு முதல் குழந்தையாய் ஒரு
பெண் குழந்தை. அடுத்த ஆண்டே அடுத்த குழந்தை. ஆண்டுகள் பல கடந்த நிலையில், தங்களது
வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, பருவமெய்திய, தங்களது மகளை, கோயிலுக்கே அர்ப்பணிக்க
வந்திருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்தக் கூட்டம்.
மேள தாளங்கள் முழங்க, அக்கோயில் பூசாரி,
அப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறார். பூசாரி கட்டினால் கடவுளே கட்டியதாக
அர்த்தம். இதன் பெயர்தான் பொட்டு கட்டுதல்.
பகலில் பூசை நேரங்களில் இறைவனுக்கு முன்
இவர்கள் நாட்டியமாடுவார்கள். இரவிலோ வசதி படைத்தவர்களின் விளையாட்டுப் பொம்மைகள்
இவர்கள். இவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கும், ஆனால் தந்தை யாரென்று தாய்க்குக்
கூடத்தெரியாது. இறைவனின் குழந்தைகள்.
இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெண்ணாகப்
பிறந்தால், அவர்களும் தாயின் வழியில்தான் வாழ்ந்தாக வேண்டும். இவர்கள்தான்
தேவதாசிகள். இவர்கள் ஒருபோதும் விதவையாக மாட்டார்கள். இவர்கள் நித்ய சுமங்கலிகள்.
இறைவனின் பெயரால் இந்த இழிநிலை.
பெற்றோர்களின் அறியாமையினால், கல்வி கற்காமையினால், கோழி, ஆடு, மாடுகளைப் போல்,
பெண்கள் நேர்ந்துவிடப் படுவதும், செல்வந்தர்களின் போகப் பொருளாய் மாறி, இவர்கள்
தவித்த தவிப்பும், அனுபவித்த கொடுமையும், பல நூறு ஆண்டுகளாய், நமது புண்ணிய பூமியில்,
தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. மீட்பர் ஒருவர் வரும்வரை. ஒரு பெண் மீட்பர்.
சென்னை மாகாண சட்டசபையின் மேலவைத் துணைத்
தலைவரான, அப்பெண் மீட்பர், 1927 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள், தேவதாசி முறை
ஒழிப்பிற்கான தீர்மாணத்தை முன் மொழிந்தார்.
அறிவு ஜீவிகள் கொதித்து எழுந்தனர். நாட்டியக்
கலையே அழிந்து போகும் அபாயம் வந்து விட்டது. கலை காப்பாற்றப்பட வேண்டாமா? இந்த
அநீதியைத் தடுப்பார் யாருமில்லையா? இறைவன் முன் நடைபெறும் நாட்டியம் நின்றால்,
இறைவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்துவிட மாட்டானா? என பலவாறு பிதற்றினர்.
பெண்களை இழிவு படுத்தித்தான், அவர்களின்
பெண்மையைச் சுறையாடித்தான், பரத நாட்டியக் கலையை வளர்க்க வேண்டும் என்றால்,
காப்பாற்ற வேண்டும் என்றால், அந்தக் கலையே தேவையில்லை என முழங்கினார்
அம்மீட்பர்.
மீட்பருக்கு ஆதரவாக மகாத்மா காந்தி
குரல் கொடுத்தார். பெரியாரோ பொங்கி எழுந்தார். தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை
எதிர்ப்போரைப் பார்த்து சவால் விட்டார், தேவதாசி முறை தொடர வேண்டும் என்று,
கொந்தளிக்கிறீர்களே, கொக்கரிக்கிறீர்களே, உங்கள் வீட்டுப் பெண்களைப் பொட்டுக்
கட்டி அனுப்பத் தயாரா?
ஒரு நாளா, இரண்டு நாளா, இரண்டு ஆண்டுகாலப்
போராட்டம். மீட்பரின் அயரா உழைப்பு, தளராத போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றே
விட்டது. 1929 ஆம் ஆண்ட பிப்ரவரி மாதத்தில், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்
நிறைவேறியது.
இன்று நம் குடும்பப் பெண்கள், கோயிலுக்கு
நேர்ந்துவிடப் படாமல், செல்வந்தர்களின் படுக்கை அறையை அலங்கரிக்காமல்,
ஆசிரியைகளாய், பொறியாளர்களாய், மருத்துவர்களாய், விஞ்ஞானிகளாய், விண்வெளி வீரர்களாய்
உலகை வலம் வருகிறார்களே, இதற்குக் காரணம் அம் மீட்பரல்லவா?
நிமிர்ந்த
நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில்
யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த
ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர்
திறம்புவ தில்லையாம்
அமிழ்ந்து
பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக்
கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து
தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
என்று பாரதி
பாடுவாரே, அந்தப் புதுமைப் பெண் அல்லவா இவர். அவர்தான்
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி.
புதுக்கோட்டை அரசினர் கல்லூரியில் காலடி
எடுத்து வைத்த முதல் பெண் இவர். 1907 இல் சென்னை மருந்துவக் கல்லூரியில் நுழைந்து,
1912 இல் மருத்துவராய் வெளிவந்தவர் இவர்.
இந்தியாவிலேயே டாக்டர் பட்டம் பெற்ற முதல்
பெண்மணி.
டாக்டர் சுந்தர ரெட்டி என்பாரை மணந்ததால்
முத்துலட்சுமி ரெட்டி ஆனார்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஆதரவற்ற
பெண்களுக்கான அவ்வை இல்லம், குழந்தைகள் பாதுகாப்பு இல்லம், இவையெல்லாம்
முத்துலட்சமி ரெட்டியின் அயரா உழைப்பால் உதயம் கண்டவையாகும்.
நண்பர்களே, முத்துலட்சுமி அம்மையார்ரின்
முயற்சியால் உருவான குழந்தைகள் பாதுகாப்பு இல்லம்தான், இன்று உருமாறி, குற்றம்
புரிந்த சிறுவர்கள், எதிர்காலத்தல் திருந்தி வாழ வழி செய்யும், சிறுவர்
சீர்திருத்தப் பள்ளிகளாகக் காட்சியளிக்கின்றன.
மகாத்மா காந்தி அவர்கள், ஒத்துழையாமை
இயக்கத்தைத் தொடங்கியபோது, சற்றும் தயங்காமல், மேலவைத் துணைத் தலைவர் பதவியை
உதறித் தள்ளிய வீரப் பெண்மணி முத்துலட்சுமி ரெட்டி.
நம் குலப் பெண்களை, சகோதரிகளை மொபெரும் இழி
நிலையில் இருந்து மீட்ட, காத்த முத்துலட்சுமி அம்மையார், கண்மூடி ஓய்வெடுக்கத்
தொடங்கிய நாள் இன்று.
ஜுலை 22, 1968.
போற்றி
போற்றிஓர் ஆயிரம் போற்றி, நின்
பொன்ன
டிக்குபல் லாயிரம் போற்றிகாண்.
சேற்றி லேபுதி
தாக முளைத்ததோர்
செய்ய தாமரைத்
தேமலர் போலொளி
தோற்றி நின்றனை
பாரத நாட்டிலே
துன்பம்
நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை
மாதரசே எங்கள்
சாதி செய்த
தவப்பயன் வாழி நீ.
- மகாகவி பாரதி
No comments:
Post a Comment