Saturday, August 30, 2014

நேசமே, சுவாசமாய்

நேசன் என்றால் நண்பனாவான். ஒருவன் தன் நண்பனிடத்துச் செலுத்துகின்ற பாசம் நேசமாகும். நம் அனைவருக்கும் நேசர்கள், நண்பர்கள் உண்டு. எனினும் உண்மை நேசத்தோடு பழகுபவர்கள் எத்துனை பேர்?
     சேரமானும் சுந்தரரும் போல, கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் போல, ஔவையாரும் அதியமானும் போல, என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்களைத்தானே, நட்பிற்கு இலக்கணமாய், எடுத்துக்காட்டாய் இன்றளவும் கூறிவருகின்றோம். தற்காலத்தில், அல்லது சமீப காலத்தில் நட்பிற்கு எடுத்துக் காட்டாய் வாழ்ந்தவர்கள் யாருமில்லையா? இருக்கின்றார்கள்.
     நேசத்தினையே சுவாசமாய் சுவாசித்து, வாழ்ந்த மாமனிதர் ஒருவரைக் காண்போமா?  கால இயந்திரத்தில் ஏறி சற்றுப் பின்னோக்கிப் பயணிப்போம், வாருங்கள்.. வருடங்கள் பின்னோக்கிச் செல்கின்றன. இதோ தஞ்சாவூர் வடவாற்றின் வடகரையினில் அமைந்திருக்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் தெரிகிறது. கீழிறங்குவோமா.
    அதோ, அரச மரத்தடியில், மூத்த பிள்ளையார் சிலைக்கு அருகில், வெற்றிலையினை மென்றபடி, மலர்ந்த முகத்துடன், இதழ்களில் புன் சிரிப்புடன், கவிதை எழுதிக் கொண்டிருக்கிறாரே, யார் இவர்?
             கருமைஉரு வெண்மைப்பல்  நரைத்ததலை 
                     கறையற்ற  செம்மைமனம்  புன்சிரிப்பு  எளிமைநிலை
                      பிறைகறுத்த  பெருநெற்றி  அதில்மணக்கும்  நறுஞ்சாந்தம்
                      மறைவல்ல  ஒளிமுகத்திற்  கொப்புமையும்  இலையன்றோ
                                                          -சி.அரசப்பன்
ஓ, கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை என்பவர் இவர்தானா?
     ஆம். ஆருயிர்த் தோழன் சங்கம் நிறுவிய துங்கன் த.வே.இராதாகிருட்டினனுக்காகவும், தமிழ் மணம் கமழும் தமிழவேள் உமாமகேசுவரருக்காகவும், தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த கரந்தைக் கவியரசு  இவர்தான்.
     உடல் தளர்ந்து,  கால்கள் வலுவிழந்து நடக்க இயலாத நிலையில் கூட, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை விட்டு அகலாது, தனது இறுதி மூச்சுவரை,  நேசம் காத்த, பாசம் போற்றிய கரந்தைக் கவியரசர் இவர்தான். கவியரசரின் நேச வரலாற்றினை அறிந்து கொள்வோம் வாருங்கள். 
         கரந்தை என்ற சொல்லுக்கு மீட்டல் என்ற ஒரு பொருளுண்டு. தமிழ் மொழியின் இழந்த பெருமைகளை மீட்கத் தோன்றிய அமைப்புக் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.இதன் முதல் தலைவராய் அமர்ந்து முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றியவர் தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களாவார். இம்முப்பதாண்டுகளும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராய் பொறுப்பேற்று, உமாமகேசுவரனாருடன் உடனிருந்து உழைத்த, உதவிய, சங்கத்தை உயர்த்திய உன்னதப் புகழுக்குரியவர் கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிளையாவார்.
       எந்நன்றி   கொன்றார்க்கும்   உய்வுண்டாம்  - உய்வில்லை
       செய்ந்நன்றி  கொன்ற  மகர்க்கு
என்று நன்றியறிதலையும்,
        நட்பிற்கு  வீற்றிருக்கை  யாதெனில்  கொட்பின்றி
        ஒல்லும்வாய்  ஊன்றும்  நிலை
எனறு நட்பின் பெருமையையும் ஆணித்தரமாகப் பதிவு செய்வார் திருவள்ளுவர். இவ்விரண்டு குறள்களுக்கும் எடுத்துக்காட்டாகவே வாழ்ந்து காட்டிய பெருமைக்குரியவர் கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்களாவார்.
        கவியரசு அவர்கள் தஞ்சைக்கு அருகிலுள்ள, மோகனூர் என்னும் சிற்றூரில் 1886 ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் ஐந்தாம் நாள் பிறந்தவர். தொடக்கக் கல்வியை மோகனூரிலேயே அமைந்திருந்த திண்ணைப் பள்ளியில் கற்றார். தொடர்ந்து தஞ்சாவூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள தூய பேதுரு கல்வி நிலையத்தில் சேர்ந்தார். தூய பேதுரு கல்வி நிலையத்தில் இவரின் வகுப்புத் தோழராய், இன்னுயிர் நண்பராய் அமைந்தவர் இராதாகிருட்டினன் ஆவார். இவர் வேறு யாருமல்ல, பின்னாளில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி சங்கம் நிறுவிய துங்கன் எனப் போற்றப்பெற்ற இராதாகிருட்டினன் ஆவார். கவியரசரும், இராதாகிருட்டினனும் ஈருடல் ஓருயிராய் பழகத் தொடங்கினர். இராதாகிருட்டினனுடைய நட்பானது கவியரசரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது.
      தூய பேதுரு கல்வி நிலையத்தில் இவர்களுக்குத் தமிழாசிரியராய் இருந்தவர் குயிலையா என்றழைக்கப்பெற்ற ஆர். சுப்பிரமணிய அய்யராவார். குயிலையாவிடம் நன்னூல், திருக்குறள்,சீவக சிந்தாமணி போன்ற சிறந்த இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். குயிலையா தமிழ்ப் பாடல்களோடு தமிழுணர்வையும் சேர்த்தே ஊட்டினார்.
    
மகுடியின் ஓசைகேட்ட நாகம் போல, தமிழின் இனிமை கண்டு மயங்கிய கவியரசர், தமிழமுதைத் தேடித் தேடிப் பருகினார். தாமே முயன்று தமிழ்த் துறையில் சிறந்த அறிஞர்கள் பலரை தேடிச் சந்தித்துக் கற்றுத் தேர்ந்து தமிழ்த் துறையில் மிகுந்த புலமை பெற்றவரானார். ஆயினும் தனக்கு முதன் முதலில் தமிழின் சுவை உணர்த்திய குயிலையா சுப்பிரமணிய அய்யரை மறக்கவில்லை. குயிலையாவிற்குத் தான் செலுத்தும் குருதட்சனையாக ஆசானாற்றுப் படை எனும் கவிதை நூலைப் படைத்தார். இந்நூலுக்குப் பதிப்புரை எழுதி வெளியிட்டவர் யார் தெரியுமா? சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன்.
      இந்நூலைப் பற்றிய மிகுந்த வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், இந்நூல் வெளியிடப்பெற்ற ஆண்டு 1910 ஆகும். அதாவது தனது 24 ஆம் வயதிலேயே கவிபுனையும் ஆற்றல் கைவரப்பெற்றவர் கவியரசு அவர்களாவார்.
      இது மட்டுமல்ல தனது குழந்தைக்கு அத்தமிழாசிரியரின் நினைவாக சுப்பிரமணியம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
       1911 ஆம் ஆண்டு மே திங்கள் 14 ஆம் நாள் சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன் அவர்களின் பெருமுயற்சியால் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்றது.நண்பர் இராதாகிருட்டினன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழவேள் உமாமகேசுவரனார் அவரகள் சங்கத்தின் முதல் தலைவராகவும், கரந்தைக் கவியரசு அவர்கள் சங்கத்தின் முதல் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 1916 ஆம் ஆண்டு செந்தமிழ்க் கைத் தொழிற் கல்லூரி ஒன்று தொடங்கப் பெற்றது. அவ்வமயம் கவியரசு அவர்கள் கோணார் பற்று என்னும் ஊரில் அமைந்திருந்த கற்பக விநாயகா கலா சாலையில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தார்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார் அவர்கள் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தினாலும் நட்பினாலும், கோணாற் பற்றில் தனது பணியினைத் துறந்து, கோணாற் பற்றில் பெற்று வந்ததைவிட குறைந்த ஊதியத்தில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்ச் கைத் தொழில் கல்லூரியில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார்.
     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோற்றம் பெற முழுமுதற் காரணமாக விளங்கியவரும்,கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளராகத் தன்னை அமர்த்தி, தான் மட்டும் தொண்டனாகவே இருந்து, தமிழ்ப் பணியாற்றியவருமான சங்கம் நிறுவிய துங்கன் த.வே.இராதாகிருட்டினன் அவர்கள் 1918 ஆம் ஆண்டில், தனது 33 ஆம் வயதிலேயே அகால மரணமடைந்தபோது, அனலிடைப் புழுவாய்த் துடித்தார்.
        என்றிளைய  பருவத்தே எழுந்துநின்  னட்பம்மா
        அன்றுமுதல்  யாமெய்துஞ்  சிரெல்லாம்  அதன்பயனே
        நன்றுதரும்  நண்பாவோ  நண்பாவோ  நண்பாவோ
        ஒன்றுளத்து  நினையன்றெம்  மூக்கமதே  யிழந்தனமே.
எனப் பலவாறு வருந்தி துயறுற்ற கவியரசு அவர்கள் செந்தமிழ்க் தைத் தொழில் கல்லூரியின் சார்பில் இராதாகிருட்டினன் கழகம் என்னும் பெயரில் கழகமொன்றைத் துவக்கி, இராதாகிருட்டினன் நினைவினைப் போற்றி வரலானார்..
      உமாமகேசுவரனாரின் தொடர் முயற்சிகளின் விளைவாக, திருவையாற்றின் வட கரையில் செயல் பட்டு வந்த வடமொழிக் கல்லூரியானது, தமிழ்க் கல்லூரியாக, அரசர் கல்லூரியாக மாற்றப் பெற்றது.மிகச்சிறந்த புலமைவாய்ந்த கவியரசர் அவர்கள் செந்தமிழ்க் கல்லூரியில் சிறுவர்களுக்குத் தமிழ் எழுத்துக்களைச் சொல்லித் தருவதைவிட, திருவையாற்று அரசர் கல்லூரியில் பேராசிரியராய் பணி செய்து அதிக எண்ணிக்கையில் தமிழ்ப் புலவர்களை உருவாக்கினால் தமிழ் மொழி மேலும் வளம் பெறும் என்று உமாமகேசுவரனர் எண்ணினார்.உமாமகேசுரனாரின் விருப்பப்படியே கரந்தைக் கவியரசு அவர்கள் 1932  ஆண்டு திருவையாற்று அரசர் கல்லூரியில் பேராசிரியராய் பணியில் சேர்ந்தார்.
     1938 ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவின் போது, அரங்க வேங்கடாசலம் பிள்ளை அவர்களுக்குத் தங்கப் பதக்கம்  அணிவிக்கப்பெற்று, கரந்தைக் கவியரசு எனும் சீர் மிகு பட்டம் வழங்கப் பெற்றது. 
       இந்நிலையில், வடநாடு சென்ற உமாமகேசுவரனார் உடல் நலக் குறைவு காரணமாக, அயோத்திக்கு அருகே அமைந்துள்ள பைசாபாத் என்னும் நகரில் உள்ள குறசி மருத்துவமனையில் 1941 ஆம் ஆண்டு இயற்கை யெய்தினார்.
சங்கமுதல்  வாயிலிலே  தளிராலின்  நிழலகத்தே  சார்ந்த  மன்றம்
அங்கங்காம்  அவற்றகத்தே  ஆற்றிடத்தே  அகல்வெளியாம்  ஆங்கே மற்றும்
எங்கணுநீ  நிற்கின்றாய்  இருக்கின்றாய் இயல்கின்றாய்  எளியேம்  பாலே
பொங்கினிய மொழிகின்றாய் பொற்புடைய தலைவஇவைபொய்யோ  மெய்யோ
என சங்க வளாகத்தில் காணும் இடங்களில் எல்லாம், காணும் பொருட்களில் எல்லாம், கேட்கும் ஒலிகளில் எல்லாம் தனது இன்னுயில் நண்பர் தமிழவேள் அவர்களையே கண்ட கவியரசர், தமிழவேள் தலைவராய் இனி அமராத இடத்தில், தான் மட்டும் செயலாளராய் பணிசெய்தல் தகுமோ என நெஞ்சம் கலங்கினார்.
      தமிழவேள் இல்லாத இடத்தில், ஒரு சாதாரணத் தொண்டனாய் தொண்டாற்றுதலே இனி யாம் செய்ய வேண்டியது என்று எண்ணிய கவியரசர் அவர்கள்,உமாமகேசுவரனார் மறைந்த சில நாட்களிலேயே தனது செயலாளர் பணியினைத் துறந்தார்.
      கவியரசர் அவர்கள் 1942 ஆம் ஆண்டு திருவையாற்று அரசர் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற நிலையில் உடன் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர், கவியரசரை நோக்கி இனி தாங்கள் எங்கு தங்க விருப்பம் என்று கேட்டார். அதற்குக் கவியரசர், யான் கரந்தையில் தங்க வேண்டும் என்னும் குறிப்புடனேயே, வெள்ளி விழாவில் தங்கப் பதக்கம் (தங்கப் பதக்கம் அதாவது தங்குவதற்காகப் பதக்கம்) அளித்துவிட்டு உமாமகேசுவரம் பிள்ளை சென்று விட்டார்கள் என்று தமிழவேளை நினைவு கூர்ந்து தழுதழுத்த குரலில் கூறினார்.
      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழாவின் போது 1938 ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் அவர்களால் கரந்தைப்  புலவர் கல்லூரி தொடங்கப் பெற்றது.இக் கல்லூரியானது நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு 1941 ஆம் ஆண்டு தான் சென்னைப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றது. 1942 இல் ஓய்வு பெற்ற கவியரசர் கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியில் சேர்ந்தார்.1942 முதல் 1945 ஆம் ஆண்டு வரை கரந்தைப் புலவர் கல்லூரியின் துணை முதல்வராகவும், 1946 முதல் 1948 வரை கல்லூரியின் பொறுப்பு முதல்வராகவும் சீரியப் பணியாற்றினார்.
    கவியரசரின் வளமான உடல்நிலையானது 1945 ஆம் ஆண்டில் தளர்ச்சியுறத் தொடங்கியது.ஏறு போல் வீறு நடை போடும் கவியரசரின் கால்கள் வலுவிழக்கத் தொடங்கின. தமிழ்ச் சிங்கத்தின் உடல், ஊன்று கோலை நாடியது.  கைகள் ஊன்று கோலைப் பற்றினாலும், மனமானது தமிழைப் பற்றியே இருந்தது. தன் உடல் நிலை காரணமாக 1946 ஆம் ஆண்டில் கல்லூரி முதல்வர் பொறுப்பினைத் துறந்தாலும், பேராசிரியராகத் தன் தமிழ்ப் பணியினைத் தொடர்ந்தார். 
    உடல் தளர்ந்திருந்த நிலையில், கவியரசரை வழியில் சந்தித்த நண்பர் ஒருவர், தங்களது சாகை எங்கே? (தங்களது வீடு எங்கே?) என்று கேட்க, கவியரசரோ சாதல் என்பதை உணர்த்தும் பொருளில் எனது சாகை கரந்தையிலேதான் என்று மறுமொழி கூறினார். தனது வாழ்வும் சாவும் உமாமகேசுவரனார் இருந்த கரந்தையிலேதான் என்பதில் கவியரசர் உறுதியாக இருந்தார்.
     நாளடைவில் கால்கள் மேலும் தளர்ச்சியுறவே, ஊன்று கோலைப் பயன்படுத்தியும் நடக்க இயலாத நிலை. உடல் தளர்ந்திருந்தாலும் உள்ளம் தளர்ந்தாரில்லை.  சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும், அதன் தமிழ்ச் சீற்றம் குறையவில்லை. தனது இறுதி மூச்சு உள்ளவரை, தனது பணி சங்கப் பணியே, தமிழவேள் பணியே, தமிழ்ப் பணியே என்பதைக் குறிக்கோளாகக் கொண்ட கவியரசர், சங்கத்திற்கு அருகிலேயே குடியேறினார். நாற்காலி ஒன்றில் நான்கு சக்கரங்களைப் பொறுத்தச் செய்து, சிறு தள்ளு வண்டி ஒன்றினை தயாரிக்கச் செய்தார் கவியரசர். ஏழ்மை நிலையில் இருந்த விஸ்னு எனும் மாணவனை தனது வீட்டிலேயே தங்க வைத்து ஆதரவளித்து வந்தார் கவியரசர். அம்மாணவன் தினமும்  கவியரசரை நாற்காலியில் அமர வைத்து சங்கத்திற்கு வண்டியைத் தள்ளிக் கொண்டே வருவான். கவியரசர் தள்ளு வண்டியை தனது வகுப்பின் நிலைக் கதவிற்கு அருகில் நிறுத்துமாறு செய்து, அங்கிருந்தவாறே மாணவர்களுக்குப் பாடம் நடத்துவார்.
   ஒரு நாள் கவியரசசின் தமையனார் வேலாயுதம் பிள்ளை அவர்கள், உடல் நலம் மிகவும் குன்றியிருந்த கவியரசரைப் பார்த்து, தாங்கள்  இனி மோகனூருக்கே வந்து விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  கவியரசர் பதில் கூறாமல் அமைதியாய் இருக்கவே, கவியரசரின் அருமை மகனார் சுப்பிரமணியம் அவர்கள், தனது சிற்றப்பாவைப் பார்த்து கரந்தைத் தமிழ்ச் சங்கம் மோகனூருக்கு வந்தால்தான், அப்பா அங்கு வருவார்கள் என்று பதில் கூறினாராம். 
   கவியரசர் கரந்தையைக் காதலித்தார். கவியரசு அவர்கள் தமிழ் மேல் கொண்ட பற்றினாலும், தமிழவேள் மேல் கொண்டபாசத்தினாலும், சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன் மேல் கொண்ட நட்பாலும், கரந்தையை விட்டு விலகாமல் தமிழ்ப் பணியாற்றி வந்தார்.
            பிணியினைப் பாராட்டும்  பெற்றியார்  யாரோ?
                       பிணியினால்  நீவருந்திப்  பேதுற்ற  போதும்
                       பிணியால்  வருநலங்கள்  பேசிப்பா  ராட்டிப்
                       பிணிப்பத்தும்  பாடினையே  பேர்த்து
கவியரசர் தன் உடல் மேலும் நலிவுற்ற நிலையிலும் கூட தமிழையே சுவாசித்தார். தன் உடல் நலம் குறைவுற்று படுக்கையில் கிடந்தபோதும் துன்பப் பத்து எனும் கவிதை நூலை இயற்றி தமிழன்னைக்கு அமுது படைத்தார்.
           சாகும்  போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்
                      எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்
என்ற ஈழக் கவி சச்சிதானந்தனின் பாடல் வரிகளுக்கேற்ப, தமிழுக்காக மட்டுமல்ல, நட்பிற்காகவும் வாழ்ந்த கவியரசர் அவர்கள்1953 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 16 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று, இம்மண்ணுலகு துறந்து, தேவருலகின் கவிச் சக்கரவத்த்தியானார்.
           தமிழ்மொழியும்  தமிழ்நாடும்  தக்காரும்  இருக்கும்வரை
                     தமிழ்த்தேனின்  சுவைமாந்தும்  மொழித்தொண்டர்  இருக்கும்வரை
                     தமிழர்தம்  அகவுணர்ச்சி  தலைநிமிர்ந்து  இருக்கும்வரை
                     தமிழ்ப்புலவர்  கவித்தலைவர்  கரந்தைக்கவியரசர்  புகழ்வாழும்.

சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன், தமிழவேள் உமாமகேசுவரனார் ஆகியோர் மேல் கொண்ட நேசத்தால், நட்பால், பாசத்தால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை விட்டு அசையாது, அகலாது, தனது இறுதி மூச்சு உள்ளவரை நேசம் பாராட்டிய கவியரசரைப் போன்ற, நேசர் ஒருவரை நாம் காணும் நாள் எந்நாளோ?
கரந்தைக் கவியரசரின் புகழ்பாடுவோம்
நட்பின் பெருமையினைப் பறைசாற்றுவோம்.
    
    

1 comment:

  1. 1.7.2016 அன்று கரந்தைதமிழ்க்கல்லூரிக்கு ஒரு வாய்மொழித்தேர்விற்குப் புறத்தேர்வாளராக வருகை தர இருக்கிறேன். தங்களின்இப்பதிவு எனக்கு பேருதவியாக இருக்கிறது. மூன்று தமிழ் பேரறிஞர்கள் வாழ்ந்த இடத்திற்கு செல்லப் போகின்றேன் என்று அறிந்துபெருமிதம் அடைந்தேன்.நன்றி

    ReplyDelete